கோவை மாவட்டம் சூலூர் அருகே பள்ளபாளையத்தில் பொதுசுகாதாரத்துறை சார்பில் வருமுன் காப்போம் முகாம் நடந்தது. இந்த முகாமில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பி.கந்தசாமியும் கலந்து கொண்டார். அப்போது விழாவில் வி.பி.கந்தசாமி பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலும், கருணாநிதி காலத்திலும் மருத்துவத்துறைக்கு என்று தனி கவனம் செலுத்தினர். அதேபோன்று தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மருத்துவத்துறைக்கு தனியாக கவனம் செலுத்தி வருகிறார். மக்களை காப்பாற்றுவதில் சீரிய சிந்தனையோடு தமிழக அரசு செயலாற்றி கொண்டிருக்கிறது. மக்களின் இருப்பிடத்திற்கு நேரடியாக வந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே இந்த அரசின் நோக்கம். பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் (தி.மு.க.) என்ன திட்டம் கொண்டு வந்தாலும், எம்.எல்.ஏ.வான நான் அவருக்கு உறுதுணையாக இருப்பேன். ஏனென்றால் நானும் மக்கள் பிரதிநிதி. அவரும் மக்கள் பிரதிநிதி. எங்களின் சின்னங்கள் வேறு, வேறாக இருந்தாலும் எண்ணங்கள் என்பது ஒன்று தான். எங்களின் எண்ணங்கள் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக்காகவே மட்டுமே இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், அவர் கொண்டு வந்த திட்டத்தையும் பாராட்டி பேசியது கோவை மாவட்ட அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் முதல்-அமைச்சரை பாராட்டியதால் தி.மு.க.வுக்கு செல்ல தயாராகி விட்டாரோ என்ற பரபரப்பும் எழுந்தது. இதுதொடர்பாக வி.பி.கந்தசாமி எம்.எல்.ஏ.விடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
பள்ளபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மருத்துவத்துறைக்கு ஒவ்வொரு அரசும் அளித்து வரக்கூடிய முக்கியத்துவம் பற்றி மட்டுமே பேசினேன். மேலும் அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறித்து மட்டுமே பேசினேன். தமிழகத்தில் மினி கிளினிக்கை மூடி வருகிறார்கள். அது குறித்து நான் அந்த நிகழ்ச்சியில் பேசியிருந்தால் அது அரசியலாகி விடும். அதன் காரணமாகவே அதனை பற்றி பேசாமல் மக்களுக்கு பயன்படும் திட்டத்தை பற்றி பேசினேன். ஆனால் எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் 1972-ல் மாணவ பவருத்திலேயே அ.தி.மு.க.வில் இணைந்து விட்டேன்.
அன்றில் இருந்து இன்று வரை நான் அ.தி.மு.க தொண்டனாகவே நீடிக்கிறேன். தொண்டனாக இருந்த என்னை ஊராட்சி மன்ற தலைவராக்கியது அ.தி.மு.க. தான். ஊராட்சி மன்ற தலைவராக அந்த பகுதியில் மட்டுமே தெரிந்த என்னை ஒரு எம்.எல்.ஏ.வாக உலகுக்கு காட்டியது முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தான். குடத்தில் இட்ட விளக்காக இருந்த என்னை, குன்றின் மீது ஏற்றிய விளக்காக மாற்றியது எடப்பாடியும், எஸ்.பி.வேலுமணியும் தான். நான் எப்போதுமே அ.தி.மு.க.வின் உண்மை தொண்டனாகவும், எடப்பாடியின் உண்மை விசுவாசியுமாகவே இருப்பேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை வந்த எடப்பாடியாருக்கு சூலூர் பகுதியில் தொண்டர்களை திரட்டி வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தேன். அப்படி இருக்கும் போது நான் தி.மு.கவுக்கு தாவ இருப்பதாக வரும் தகவல் வெறும் வதந்தியே. அப்படி எதுவும் இல்லை. எனது உடம்பில் அ.தி.மு.க. ரத்தமே ஓடி கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தால் சந்ததியே விளங்காது. நான் எப்போதும் அ.தி.மு.க.வை விட்டு விலக மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.