விரைவில் பொதுத் தேர்தலுக்குச் செல்லுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துவோம்

125 0

அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வாரம் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தை தோற்கடிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் செயற்பாட்டில் உள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள்.மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினருக்கு எதிர்வரும் நாட்களில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தை முன்னேற்றகரமாக இடம்பெற்ற நிலையில் தான் 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.தற்போது பாராளுமன்றத்தின் ஊடாக தேசிய சபையை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது என்ற சிக்கல் காணப்படுகிறது.பாராளுமன்ற நிர்வாகத்தினால் மாத்திரம் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்காவிடின் உடன் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட எதிர்பார்த்துள்ளோம் என்றார்.