இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுடையும்

128 0

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதாகவும், இருநாடுகளும் சுதந்திரமடைந்து 100 ஆவது வருடம் பூர்த்தியடையும் வேளையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மிகவும் வலுவானதாகக் காணப்படும் என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இந்தியா சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூரும் விதமாக இலங்கை – இந்திய அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இராப்போசன விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை – இந்திய அமைப்பானது கடந்த 1949 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இம்முறை இந்தியா 75 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடுவதைப்போன்று அடுத்த வருடம் இலங்கை சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

எனவே அதனை மற்றொரு விதமாகக் கூறுவதெனில், இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் வலுவடைந்து 75 வருடங்களாகின்றன என்றும் குறிப்பிட்டார்.

‘1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தபோது ஒருமைப்பாட்டையும் சுயாட்சியையும் நிலைநிறுத்துவதை முன்னிறுத்தி இயங்கவேண்டியிருந்த போதிலும், இப்போது இந்தியா நீண்ட தூரத்தைக்கடந்து வந்துவிட்டது.

எனவே அடுத்தகட்டமாக 2047 ஆம் ஆண்டாகும்போது இலங்கையும் இந்தியாவும் எவ்வாறிருக்கும், எவ்வாறிருக்கவேண்டும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இருநாடுகளும் சுதந்திரமடைந்து 100 ஆவது வருடம் பூர்த்தியடைகின்ற வேளையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதுஇவ்வாறிருக்க இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய இலங்கை – இந்திய அமைப்பின் தலைவர் கிஷோர் ரெட்டி, இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல், பொருளாதார, சமூக, மொழியியல், பாரம்பரிய, கலாசாரத்தொடர்புகள் குறித்து நினைவுகூர்ந்ததுடன் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.