யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களையும், நகைகளையும் கண்டுபிடிக்கும் நோக்குடன் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் மதியம் 2 மணியுடன் நிறுத்தப்பட்டது.
டச்சு வீதியில் உள்ள வீடொன்றில் புலிகளின் விடுதலைப் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களும், நகைகளும் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அவற்றைத் தேடிக் கண்டு பிடிப்பதற்கான அகழ்வை மேற்கொள்ள யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கோப்பாய்ப் பொலிஸார் கோரி இருந்தனர்.
நீதிமன்ற அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை காலை 10 முதல் மதியம் 2 மணி வரையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
புதையல் அகழ்வதற்காக கொழும்பில் இருந்து விசேட அணியினர் வந்திருந்த நிலையில் , அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போது, எவ்விதமான பொருட்களும் மீட்கப்படாத நிலையில் அகழ்வு பணிகள் மதியம் 2 மணியளவில் இடைநிறுத்தப்பட்டன.