அதிகாரம் இல்லாவிட்டாலும் நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவோம்-சஜித்

117 0

74 வருடங்களாக எல்லா அரசியல்வாதிகளும் நாட்டை அழித்ததாகவும், 225 பேரும் ஒரே மாதிரியானவர்கள் எனவும் பலர் குற்றம் சுமத்திய போதிலும், நாட்டின் ஜனநாயக வரலாற்றில் பாரம்பரிய எதிர்க்கட்சியிற்கு அப்பால் சென்று, அரச அதிகாரம் இருந்தோ அல்லது இல்லாமலோ மக்கள் சமூகத்தை பலப்படுத்த தற்போதைய எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

இதற்காக தமக்கு அமைச்சுப் பதவிகளோ, சலுகைகளோ தேவையில்லை எனவும், எதிர்க்கட்சியில் இருந்தாலும், சலுகைகளை பொருட்படுத்தாமல் மக்களுக்காக முன் நிற்பதாகவும், மொனராகலை ரோயல் கல்லூரியின் பிள்ளைகளின் போக்குவரத்துத் தேவைக்காக 46 இலட்சம் பெறுமதியான பேரூந்து வழங்கும் நிகழ்வில் நேற்று (16) கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு நாட்டின் ஜீவனாடியான பிள்ளைகள் அறிவு,திறமை போலவே வசதி வாய்ப்புகளிலும் பரிபூரணமாக்குவதை தனது பொறுப்பாகக் கருதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவாக அமுல்படுத்தப்படும் “பிரபஞ்சம்” நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்தாக 34 ஆவது பேருந்து நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்க்கட்சியாக இருந்தாலும்,நாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதாகவும், சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளை இலக்காகக் கொண்டு சமூக நல மேம்பாட்டுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார். இதன் பிரகாரம், 33 பாடசாலைகளுக்கு பேருந்துகள் வழங்கப்பட்டன எனவும்,மேலும் பல மருத்துவமனைகளுக்கு மருந்துகள் மற்றும் பிற அத்தியவசிய சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் பலர் இலவசக் கல்வியை எதிர்த்தனர் எனவும், இலவசக் கல்வியினால் வழங்கப்படும் வாய்ப்புகளினால் உயர் சாதியினரின் பணிகளுக்கு வேலையாட்கள் இல்லாத நிலை ஏற்படும் என அக்காலத்தில் சிலர் சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கராவை குற்றம் சாட்டிய விதத்தை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆனாலும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கண்ணங்கரா அவர்கள் தனது இலக்கை நோக்கிச் சென்று இலவசக் கல்விக் கொள்கையை வென்றெடுத்தார் எனவும், இதன் விளைவாக, 10,110 அரச பாடசாலைகள் மூலம் வழங்கப்படும் இலவசக் கல்வியின் மூலம் இந்நாட்டில் ஏறக்குறைய 43 இலட்சம் குழந்தைகள் இன்றளவிலும் அறிவைப் பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி இது போன்ற பல பணிகளைச் செய்யும் போது, ​​கடந்த காலங்களில் இருந்த எதிர்க்கட்சிகள் அரச அதிகாரத்தைப் பெறுவது போன்ற அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டன எனவும், இன்று தற்போதைய எதிர்க்கட்சி கதிர்காமம்,புத்தல வைத்தியசாலைக்கு 42.5 இலட்சம் வைத்தியசாலை உபகரணங்களும், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக போதாகம வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் பெறுமதியான கணினி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்தில் மெதகம தேசிய பாடசாலை மற்றும் புத்தல தேசிய பாடசாலைக்கு பேரூந்துகள் வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் சகலதும் அரச பணத்தைப் பெறாமல் பல்வேறு ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுவதாகவும், எனவே, 225 பேரும் ஒரே மாதிரியானவர்கள் என்று சொல்லாமல், தான் மேற்கொள்ளும் பணிகளில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், நாட்டில் கல்விக்காக ஒதுக்குவதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லாவிட்டாலும் அமைச்சர்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்குவதற்கு பணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒருபோதும் அமைச்சுப் பதவிகளோ வரப்பிரசாதங்களோ தேவையில்லை எனவும், தானும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற குழுவும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.