சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள 42 மாடி கட்டடத்தில் திடீரென நேற்றையதினம் (16) தீ பரவியது. இந்ந தீ விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கட்டடத்தின் ஒரு தளத்தில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியுள்ளது.
இதையடுத்து கட்டடத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக வெளியேறி, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்ததால் தீயணைப்பு வீரர்களால் கட்டடத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
2000 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட குறித்த கட்டடம் 715 அடி உயரத்தைகொண்டது. அந்த கட்டடம் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
இதேவேளை, குறித்த கட்டடத்தின் 12 ஆவது தளத்தில் உள்ள அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த கட்டடத்தில் சீன அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிலையமான China Telecom அலுவலகம் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த தீவிபத்திற்கான காரணத்தை கண்டறிய சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.