இலங்கையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் இனரீதியான பரிமாணத்தைக் கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிவதாக ஐ.நா விசேட அறிக்கையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் 54 ஆவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத்துறையைச்சேர்ந்த சிங்கள சமூகம் உள்ளடங்கலாக அனைத்து இன சமூகங்களினதும் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேம்படுத்தமுடியும் என்பது குறித்து நாம் அறிந்திருக்கின்றோம். இருப்பினும் இது அத்தொழிலாளர்களின் பூர்வீகத்துடனோ அல்லது இன அடையாளத்துடனோ எவ்வகையிலும் தொடர்புபடவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி ‘நாடற்றவர்களாக’ அடையாளப்படுத்தப்பட்ட இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இலங்கைப்பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் கடந்த 2003, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டதுடன் தற்போது அவர்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரின் பக்க அமர்வுகளில் ஒன்றாக அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடாவினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இலங்கை தொடர்பான இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதகுறித்த விவாதமும் இடம்பெற்றது. இந்நிலையில் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய சில விடயங்களுக்குப் பதிலளித்தும் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்களை முழுமையாக முடிவிற்குக்கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியும் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள பதிலறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையில் அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் இனரீதியான பரிமாணத்தைக் கொண்டிருப்பதனை அவதானிக்கமுடிவதாக ஐ.நா விசேட அறிக்கையாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் 54 ஆவது பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 200 வருடங்களுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மலையகத்தமிழர்கள் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கு முகங்கொடுத்துவருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் பெருந்தோட்டத்துறையைச்சேர்ந்த சிங்கள சமூகம் உள்ளடங்கலாக அனைத்து இன சமூகங்களினதும் வாழ்க்கைத்தரத்தை மேலும் மேம்படுத்தமுடியும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கின்றது. இருப்பினும் இது அத்தொழிலாளர்களின் பூர்வீகத்துடனோ அல்லது இன அடையாளத்துடனோ எவ்வகையிலும் தொடர்புபடவில்லை என்பதை சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். அதேவேளை பெருந்தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக அவர்களுக்கெனத் தனிவீடுகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்களவிலான நடவடிக்கைகள் உரிய அமைச்சுக்களின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய காலனித்துவ ஆட்சி நிலவிய 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையை ஆண்ட பிரித்தானியர்கள் தேயிலைத்தோட்டங்களில் பணிபுரிவதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து பெருமளவான இந்தியத்தமிழர்களை நாட்டிற்கு அழைத்துவந்தனர். இம்மலையகத்தமிழர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் எனவும் அழைக்கப்பட்டதுடன் அவர்கள் இலங்கையில் வசிக்கும் ‘நாடற்றவர்களாக’ அடையாளப்படுத்தப்பட்டனர். இருப்பினும் ‘நாடற்றவர்களாக’ அடையாளப்படுத்தப்பட்ட அவர்கள் இந்நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் கடந்த 2003, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளி தமிழர்களுக்கான பிரஜாவுரிமையை வழங்கி, அதனூடாக அவர்களுக்கான சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் பாராட்டையும் பெற்றது.
அதேபோன்று சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டும் அரசகரும மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டிருப்பினும்கூட பெரும்பாலான அரச அதிகாரிகள் சிங்களமொழியில் பேசுவதனால் தமிழ்பேசும் ஊழியர்கள் மீறல்களுக்கு உள்ளாவதாகவும், பெரும்பாலான பொலிஸ் அதிகாரிகள் சிங்களத்தில் பேசுவதனால் சிங்களமொழியில் முறைப்பாடளிப்பதற்கு தமிழர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடாவின் அறிக்கையின் 61 ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தமிழர் சனத்தொகை உயர்வாகவுள்ள பிரதேசங்களுக்குப் பொறுப்பாக பெரும்பாலும் தமிழ்பேசும் பொலிஸ் அதிகாரிகள் அல்லது தமிழ்மொழியில் பரிச்சயமுள்ள சிங்கள பொலிஸ் அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி இலங்கையைப் பொறுத்தமட்டில் பொலிஸ் அதிகாரிகள் தமிழ்மொழிசார் பயிற்சியைப் பெறவேண்டியது கட்டாயமானதாகும் என்று அவ்வறிக்கையில் இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.