அரச தலைவரின் தூரநோக்கமற்ற, முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவை நடுத்தர மக்கள் எதிர்கொள்கிறார்கள். 5 உறுப்பினர்கள் உள்ள ஒரு குடும்பம் மூன்று வேளை உணவிற்காக குறைந்தப்பட்சம் 4,000 ஆயிரம் ரூபா செலவு செய்யும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது என வைத்திய,சிவில் உரிமைகள் தொடர்பான தொழிற்துறையின் தலைவர் சமல் சஞ்ஜீவ தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உணவு உற்பத்தியில் தன்னிறைவடைந்த நாடு இன்று உணவிற்காக பிற நாடுகளிடம் கையேந்தியுள்ளமை உண்மையில் கவலைக்குரியதாகும். யுத்த காலத்தில் கூட இவ்வாறானதொரு அவல நிலையை நாட்டு மக்கள் எதிர்கொள்ளவில்லை. தமது பிள்ளைகள் விரும்பும் உணவு பொருட்களை கூட பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இயற்கை காரணிகளினால் நாட்டின் விவசாயத்துறை பாதிக்கப்பட்வில்லை.முன்னாள் அரச தலைவரின் தூரநோக்கமற்ற,முட்டாள்தனமான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டது. விவசாயத்துறையின் வீழ்ச்சி நாட்டின் முழு பொருளாதாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையேற்றத்தினால் நாட்டு மக்களின் உணவு பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. மொத்த சனதொகையில் 86 சதவீதமானோர் மூன்று வேளை உணவில் ஒரு வேளை உணவை வறுமை காரணமாக புறக்கணிக்கிறார்கள். 5 உறுப்பினர்களை கொண்ட ஒரு குடும்பம் ஒரு நாளுக்கான உணவிற்காக 4,000 ஆயிரம் ரூபாவை செலவிடும் நிலை காணப்படுகிறது.
யுனிசெப் அறிக்கைக்கமைய ஐந்து வயதுக்கு குறைந்த பிள்ளைகளில் 27000ஆயிரம் பேர் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காணாவிடின் மந்த போசணையால் பாதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கை 5 இலட்சமாக அதிகரிக்க கூடும்.
மந்தபோசணை பாதிப்பினால் பிள்ளைகள் பாதிக்கப்படவில்லை என அரசியல் தரப்பினர் குறிப்பிடுவது அடிப்படையற்றதாகும். மந்த போசணையின் பெறுபேற்றை இன்னும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் பெற்றுக்கொள்ள முடியும்.
கொழும்பு மாவட்டத்தில் பெரும்பாலான பின்தங்கிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தரப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத பிள்ளைகள் நாடு தழுவிய ரீதியில் இருக்க கூடும்.