அடிப்படையில் ஒழுக்கமுள்ள ஒரு குடும்ப பெண்ணின் கருத்தாக டயனா கமகேவின் கருத்து அமையவில்லை என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ் சிவகரன் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“இரவு களியாட்ட விடுதியில் உங்கள் பெண் பிள்ளையை சுற்றுலா பயணிகளுடன் நடனம் ஆட விடுவீர்களா? அப்படி விடுவீர்கள் என்றால் உங்கள் மாவட்டத்தில் அதை செய்யுங்கள். இவ்விதமான மூன்றாந்தரமான கருத்து ஒட்டுமொத்த நாட்டிற்கே அவமானம்.
தமிழ் மக்கள் ஒழுக்கத்தை உயர்வாக எண்ணியதால் தான், ஒழுக்கம் விழுப்பத்தை தரலாம் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனும் வள்ளுவ அறத்தில் பண்பாட்டியலை கட்டமைத்தவர்கள் தமிழர்கள்.
மன்னார் மாவட்ட மக்கள் மிகத் தொன்மையான வரலாற்றுப் பின்னணியும் பாரம்பரிய பூர்வீகமும் கொண்ட தனித்துவ பண்பாட்டியல் பரவு வழி செல் நெறியை கொண்டவர்கள்.
ஒப்பீட்டடிப்படையில் குற்றச்செயல்கள் குறைந்த ஆழமான சமய நெறிமுறையும் அதன் வலிமையான கட்டமைப்புக்களையும் கொண்ட உன்னதமான நெறிமுறை கொண்ட மக்கள் கூட்டத்தைக் உடைய மன்னார் மாவட்டத்தை பற்றி எதிர்காலத்தில் கூட தரம் தாழ்ந்த விமர்சனம் செய்யக்கூடாது என டயானா கமகேயை மிக மிக கடுமையாக எச்சரிக்கின்றோம்.
இவ்விதமான மூன்றாந்தரமாக சிந்திக்கும் மனிதர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதால் தான் இந்த நாடு உருப்படாமல் உள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.