சர்வதேச வர்த்தக அலுவலகமொன்றை நிறுவுவேன்! -ரணில்

138 0
சர்வதேச வர்த்தகத்தை கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகத்தை நிறுவ இருப்பதாக ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை  ஏற்படுத்தும் ஒப்பந்தங்களுக்கான பணிகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு பணித்துள்ளதாகவும்  ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும்  ஒன்றிணைந்து செயற்படுவதற்கு மேலும் பல வாய்ப்புகள் உள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை இந்திய சமூகம் (SLIS) கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் நேற்று (15) மாலை நடத்திய ஒன்றுகூடல் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்தியாவுடன் வர்த்தக ஒருங்கிணைப்பை எட்டுவது முக்கியமானது. 2048 ஆண்டாகும் போது வறுமை இல்லா, வளமான நாடாக உருவாக வேண்டும். உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கு போதுமான மொத்த உள்நாட்டு வருமானம் இருக்க வேண்டும். இல்லை என்றால் வளமான பொருளாதாரம் இருக்க வேண்டும்.   வர்த்தக ஒருங்கிணைப்பே, அண்டை நாடான இந்தியாவுடனான நமது உறவை, தீர்மானிக்கிறது. வர்த்தக ஒருங்கிணைப்பு பொருளாதார அடிப்படையை வழங்குகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் சிறந்த அரசியல் உறவுக்கு பொதுவான பொருளாதார அடித்தளம் அவசியமாகும்.

2018, 2019  ஆம் ஆண்டுகளில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை   ஏற்படுத்தும் ஒப்பந்தங்களை செய்துகொள்ள முயற்சித்தோம். அதற்குத்  தடையாக இருந்த குழுக்கள் அனைத்தையும் நிறுத்தினேன்.  இதனைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் உயர்மட்டத்துக்கு அறிவித்துள்ளேன். எவ்வாறாயினும், இலங்கை தனது சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்ய வேண்டுமானால், நாம் வேறுவிதமாக சிந்திக்க வேண்டும். அதற்காக, அனைத்து சர்வதேச வர்த்தகத்தையும் கையாளும் சர்வதேச வர்த்தக அலுவலகமொன்றை  நிறுவ முடிவு செய்துள்ளேன். நிதி அமைச்சின் கீழ் இந்த அலுவலகம் நிறுவப்படும். இதன்மூலம் எமது வர்த்தகத்தை, சர்வதேச வர்த்தகம் வரை விரிவுபடுத்த முடியும். நிறுவனங்களை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அடுத்ததாக இலங்கையில் நிறுவ முன்வரும் இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். திருகோணமலையிலும் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இது பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளது.  வடக்கைப் பொறுத்தவரை அதன் மேற்குப் பகுதி புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது போன்றே அதன் கிழக்குப் பகுதி துறைமுகத்துக்காக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவுக்கும் பங்களாதேஷிற்கும் இது பிரதான துறைமுகமாக இருப்பதனால் இதன் அமைவிடம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய எண்ணெய் கம்பனி (IOC) மேலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களை இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்திடமிருந்து வாங்க தீர்மானித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.