தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தாம் வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர் பதவி உட்பட இ.தொ.கா. வில் வகிக்கும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொட்டகலை பிரதே சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் தலைமை வகித்துப் பேசும்போது தெரிவித்தார்.
தலைவர் உட்பட 15 உறுப்பினர்கள் கலந்து கொண்ட அமர்வில் அவர் தொடர்ந்து பேசுகையில்,
அண்மையில் பெய்த பலத்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் உலர் உணவு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கொட்டகலை பிரதேச சபை கட்டிடத்தை பூர்த்தி செய்வதற்கு கொந்தரத்துக்காரருக்கு 27 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.
எனவே, உள்ளூராட்சி கடன் வழங்கும் நிதியத்தின் ஊடாக 50 மில்லியன் ரூபாவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டிடத்துக்கான பணம் செலுத்தப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு கடைத் தொகுதியை அமைத்து மாதாந்தம் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானத்தைப் பெற்று பெற்றுக் கொண்ட கடனுக்கு திருப்பிச் செலுத்தக் கூடியதாக இருக்கும்.
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் சமுர்த்தி வங்கி அமைப்பதற்கும், சுயதொழில் வாய்ப்புக்காக இளைஞர், யுவதிகளுக்கு காணி பகிர்ந்தளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது “கேஸ்” விலை குறைவடைந்துள்ளதால் கொட்டகலை தகனசாலையில் பிரேதங்களை தகனம் செய்வதற்கான கட்டணம் 1500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தனை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள கடைத் தொகுதி சம்பந்தமாக சமூக வலைத் தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. கடைத் தொகுதிகள் அரசாங்க நிதியையோ மாகாண சபை, பிரதேச சபை நிதியையோ கொண்டு கட்டப்பட்டதல்ல. இது பிரதேச சபை நிதிக் குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு அட்டன் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு அந்த இடத்தை பிரதேச சபைக்குப் பெற்றுத் தருமாறு பிரதேச செயலாளருக்கும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொட்டகலை பிரதேச சபை கடந்த 4 ½ வருடங்களாக மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வந்துள்ளது. மத்திய மாகாணத்தில் சிறந்த சபையாக அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த சபையின் கௌரவத்தைப் பாதிக்கக் கூடிய வகையில் நான் செயற்பட்டது கிடையாது. சபைக்கு அவப்பெயர் ஏற்பட இடம் கொடுக்கவும் மாட்டேன்.
பிரதேச சபைத் தலைவர் என்ற ரீதியில் இலஞ்ச ஊழலில் சிக்கியிருந்தால், அது கணக்குப் பரிசோதனை ஊடாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படும் பட்சத்தில் பிரதேச சபைத் தலைவர் பதவியிலிருந்தும் இ.தொ.கா.வில் நான் வகிக்கும் சகல பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்ளத் தயாராக இருக்கின்றேன். எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவேன். மக்கள் செல்வாக்கோடு பெரும்பான்மை வாக்குகளால் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.