காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் வடமாகாண சபையின் சார்பில் கோரிக்கை மனுவொன்று ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்தில் இன்று கையெழுத்து பெறப்பட்டதுடன், குறித்த மனு தொலைநகல் மற்றும் பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில் வடமாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கையெழுத்து இட்டதுடன், கோரிக்கை மனுவினையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் காணிகளை கையளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது மக்களின் போராட்டமாக இருப்பதனால், அதற்குரிய சாதகமான தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இல்லாவிடின் அரசியல்வாதிகள் தலையிட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.