மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம்

373 0

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள் இலங்கைக்கு வந்தோம். இலங்கையில் எமது முன்னோர்கள் இருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படுகின்றது. ஆனால் மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 13.02.2017 அன்று திங்கட்கிழமை காலை நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015ம் ஆண்டுக்கு பிறகு மலையகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. இம்மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் போது நாம் வேண்டிக் கொண்டதுக்கு அமைவாக மலையக தோட்டப்பகுதிகளில் அமைக்கப்படுகின்ற தனி வீட்டு திட்டத்திற்கான காணி உரிமை உறுதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதற்கு அமைவாக அண்மையில் தலவாக்கலையில் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காணி உறுதி பத்திரங்களை வழங்கியமை குறிப்பிடதக்கது.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 50000 வீடுகளை வழங்கியது. அதில் 4000 வீடுகள் மலையக தோட்டப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டது.எனது அமைச்சின் கீழ் இந்த 4000 வீடுகளை மலையக மக்களுக்காக நிர்மாணிக்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

மலையக சமூகம் எனக்கு தேவை. அவர்களின் உணர்வு அறிந்தவன் நான். ஆகையினால் இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்று அமைச்சர்களான ராதாகிருஷ்ணன், மனோ கணேஷன் ஆகியோருடன் ஒன்றினைந்து செயல்பட்டு வருகின்றோம்.

யார் எந்த உதவிகளை செய்தாலும் அது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதை நான் வழியுறுத்துகின்றேன் என்பதே எனது கொள்கையாகும்.இந்திய அரசு இந்த வீடமைப்பை எமக்கு அளித்தமைக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நன்றி கூறப்பட்டுள்ளோம்.

இந்தியாவிற்கும் எமக்கும் நல்ல உறவு உள்ளது. முதல் முறையாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுக்கோளுக்கமைய இந்திய அரசாங்கம் தனி வீடுகளை அமைப்பதற்கு உறுதுணையாக செயல்படுகின்றது.

மேலும் இந்தியா அரசாங்கத்திடம் நாம் தனி வீடுகளை அமைப்பதற்கு வேண்டுக்கோளை விடுத்திருக்கின்றோம். அந்தவகையில் இன்னும் பல வீடுகளை அமைப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என்றார்.​