ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பொறுப்புக் கூறுவதற்கான 2 வருட கால அவகாசம் வழங்கினால் அந்த துரோகத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கம் 2 வருட கால அவகாசம் கோருவது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குற்றஞ்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் இரண்டு வருட கால அவகாசத்தினை கோரவுள்ள நிலையில், தமிழ் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் சுமந்திரனும், தாம் இணங்கியிருக்கும் நாடகத்தினை அரங்கேற்றுவதற்கு முனைகின்றார்கள்.
அரசாங்கத்தின் கால அவகாசத்தினை ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்த முடியாமல், தமிழ் மக்களின் விமர்சனங்களை தாங்க முடியாத நிலமையில் தான் இந்த நாடகம் அரங்கேற்றியுள்ளார்கள்.
2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெளிவாக தனது நிலைப்பாட்டினை கூறியிருந்தது.
உரிய நேரத்தில் உரிய நிலைப்பாட்டினை எடுக்காவிடின், ஆட்சி மாறிய பின்னர் தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் நடுத்தெருவில் விடப்படுமென்ற கருத்தினை சொல்லிவந்தோம்.
2015ஆம் ஆண்டு உள்ளக விசாரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுடன் இணங்கிய படியால் தான் உள்ளக விசாரணையில் சர்வதேச சமூகத்தினை உள்ளடக்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
தமிழ் மக்களின் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தின் இறுதி முடிவு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது.
நிகழ்ச்சி நிரலை அரசாங்கத்தின் பொறுப்புக்கு கொடுத்ததன் பின்னர், தீர்மானத்தினை செய்யப் போவதில்லை.
தமிழன் என்ற வகையில் இலங்கை அரசு எப்படியான அரசு என்பதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் பேச்சாளருக்கும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கம் எப்படி நடந்துகொள்ளுமென அனுபவ ரீதியாக தெரிந்திருக்க வேண்டும்.
முக்கியமான காலகட்டத்தில் நிபந்தனையற்ற ஆதரவினைக் கொடுத்து, மீண்டும் மீண்டும் தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்கும் வேலையினை அரசாங்கம் முன்னெடுக்க, தமிழ் மக்களின்
முகத்தை பார்க்க முடியாது என்ற காரணத்தினால் மட்டும் இவ்வாறான கருத்துக்களை கூறி மக்களை ஏமாற்றும் நாடகத்தினை உடனே நிறுத்த வேண்டும்.
முதற்கட்டமாக தமிழ் மக்கள் உறுதியான முடிவில் இருக்க வேண்டும். ஐ.நா மனித உரிமைப் பேரவையில் எந்தவொரு கால அவகாசத்தினையும் வழங்க முடியாது. தமிழ் மக்களின்
பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் இருக்க, பொறுப்புக்கூறலை நிறுத்த களத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடைமுறையில் உள்ள தீர்மானங்களை நடைமுறைப்படுத்தக் கேட்பது முட்டாள் தனம்.
மகிந்த ராஜபக்ஷவை காப்பாற்ற அரசு முனைகின்ற சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு 2 வருட கால அவகாசத்தினை கொடுப்பதற்கான வகையில் கருத்துக்களை வெளியிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
2 வருட கால அவகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கினால், தமிழ் மக்களுக்கு இழைத்த துரோகத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஏற்றுக்கொள்ள
வேண்டுமென்பதே எமது ஆணித்தனமான கருத்து, இதனை தமிழ் மக்களும் விளங்கிக்கொள்ள வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.