முதன்முறையாக என்றுமில்லாதவாறு ஈழத்தமிழர் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்திருக்கின்றது.
ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன வழங்கப் படவேண்டும் என்பதை இந்தியா வலிறுத்தியிருக்கின்றது. இதனை நாங்கள் வரவேற்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு போன்றன தொடர்பில் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின்; நிலைப்பாட்டில் தற்போது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது எம்மால் எதிர்பார்க்கப்பட்ட மாற்றமே.
இதனை நாங்கள் வரவேற்கின்றோம். முதன்முறையாக என்றுமில்லாதவாறு இந்த மாற்றம் இடம்பெற்றிருக்கின்றது. ஈழத்தமிழர் தொடர்பாகவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாகவும் இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா பாரிய அழுத்தத்தைப் பிரயோகித்திருக்கின்றது.
ஈழத்தமிழர்களின் அரசியற் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பன வழங்கப் படவேண்டும் என்பதை இந்தியா வலிறுத்தியிருக்கின்றது.
அதேபோன்று மாகாண அதிகாரங்கள் தொடர்பிலும் இந்தியா தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. அந்த வகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் சார்ந்த அரசியற் கட்சியாகிய நாம் இந்த விடயத்தை வரவேற்று இந்திய அரசாங்கத்தின் இத்தகு நிலைப்பாட்டிற்கு தொடர்ந்தும் எமது ஆதரவினை வழங்குவோம்.
எதிர்காலத்திலும் எமது மக்களின் உரிமை தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் சர்வதேச ரிதியில் இவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என நாங்கள் இந்திய அரசாங்கத்திடம் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்திய அரசாங்கத்தின் அனுசரணை இல்லாமல் ஈழத்தமிழர்களுக்கான அரசியற் தீர்வு இந்த இலங்கைத் தீவிலே சாத்தயமில்லை என்ற விடயத்தை நாங்கள் கடந்த காலத்திலே பல தடவைகள் சொல்லி வந்திருக்கின்றோம்.
அந்த அடிப்படையில் தற்போதைய ஐநா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.
எமது எதிர்பார்ப்பு விணாகாத விதமாக இந்தியா தனது நிலைப்பாட்டை ஐநாவில் தெரிவித்திருக்கின்றது. இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டிலே நடைமுறைப்படுத்தப்படுவதற்கு நாங்கள் தொடர்ந்தும் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம்.
இதேபோன்று இவ்வாறான நிலைமைகளில் எதிர்காலத்திலும் எமது மக்களின் உரிமைகளுக்கான அகிம்சை ரீதயாகவும், ஜனநாயக ரீதயாகவும் போராடுவதற்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
கடந்த காலங்களிலே இந்திய இலங்கை ஒப்பந்தம் இங்கே கொண்டுவரப்பட்ட போது இந்திய அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட அரசியற் தீர்வு தொடர்பான விடயங்களை நம்பியே எமது போராட்ட இயக்கங்கள் பல ஆயுதங்களை மௌனித்தன.
அந்தக் காலப்பகுதிகளிலே மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியிருந்தது.
ஆனால் அப்போதிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின் அரசாங்கம் அதனை வழங்காது ஏமாற்றி வந்தது. அவ்வேளையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய விடுதலைப் புலிகள் அமைப்பின் அகிம்சைப் போராளி தியாகி திலீபன் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
அவரின் உண்ணாவிரதப் போராட்டமானது இந்திய அரசுக்கு எதிரான போராட்டமாக சில சக்திகளால் திரிபுபடுத்தப்பட்டது. அது இந்திய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் அல்ல.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு அனைத்தும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே உண்ணாவரதப் போராட்டத்தை திலீபன் ஆரம்பித்தார்.
அகிம்சைக்கு முதலிடம் கொடுக்கும் இந்தியா எமது அகிம்சைவழிப் போராட்டத்திற்கு மதிப்பளித்து இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் அழுத்தங்களைக் கொடுத்து ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து அதிகாரங்களையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நோக்கத்தோடே அப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் போராட்டத்தை இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அவரது இலட்சியப் பாதையிலே தொடர்ந்து பயணித்து வீரமரணமடைந்தார். அவருடைய உண்ணாவிரதப் போராட்ட ஆரம்ப நாளிலே நாங்கள் இந்தச் செய்தியைச் சொல்லுகின்றோம்.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா தற்போது வலியுறுத்தி நிற்கின்றது.
அந்தவகையிலே தியாக தீபம் திலீபன் அவர்களின் கனவுகள், தியாகங்கள் என்றும் வீண் போகாது வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம். அவர் வழியில் எமது மக்களுக்காக நாங்கள் தொடர்ந்தும் ஜனநாயக ரீதியில் செயற்படுவோம் என்பதை இந்த நாளிலே தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்தார்.