காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் திசைமுகப்படுத்தும் முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நேற்று இரகசியமான முறையில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் யாருக்கும் அறிவிக்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் மிக இரகசியமாக இடம்பெற்றுள்ளது
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தமக்கு தேவையில்லை என தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் ஐ நா அமர்வு ஆரம்பமாகிய நிலையில் இந்த கலந்துரையாடல் இரகசிமான முறையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான திசைமுகப்படுத்தும் முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் நேற்று (15) காலை 10.00 மணிக்கு மாவட்டசெயலக அரியாத்தை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றதாக முல்லைத்தீவு மாவட்ட செயலக ஊடகப்பிரிவு தெரிவிக்கிறது
இதன் வளவாளராக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் சட்டம் மற்றும் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் தற்பரன் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்
காணாமற்போனவர்களின் குடும்பங்கள் தொடர்பில் அவர்களின் அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவர்களுக்கு தேவையான விடய பரப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதே பூர்வாங்க விசாரணையின் முக்கியமான நோக்கமாகும்.
அதனடிப்படையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாக பூர்வாங்க விசாரணையானது பிரதேச செயலர் பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் மக்களின் பங்களிப்போடு பிரதேச செயலகங்களில் எவ்வாறு சந்திப்பினை மேற்கொள்ளமுடியும் என்பது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கும் அலுவலகத்துக்குமான தொடர்புகள், முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
மேலும் காணாமல் போனோர் அலுவலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள், நடக்க இருக்கின்ற பூர்வாங்க விசாரணைகள், காணாமல் போனவர்கள் பற்றி பதிவு செய்து கொண்டவர்கள், குடும்பங்களின் தரவுகளைப் பெற்று சான்றாதாரங்களையும் அவர்களின் வாக்கு மூலங்களையும் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான குடும்ப உதவிகளையோ அல்லது அவர்களது கோரிக்கைகளுக்கு அமைவான பூர்வாங்க மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தல், சட்ட ஆவணங்களை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்(நிர்வாகம்) க.கனகேஸ்வரன், காணாமல் போனோர் அலுவலக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் நிசாந்தன் ஜீட்பீரீஸ், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ம.கி வில்வராஜா, பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட பதிவாளர், உதவிப் பதிவாளர்கள், ஓய்வு நிலை அரசாங்க உத்தியோகத்தர்கள், சிரேஸ்ட பிரஜைகள், காணாமற்போனோர் அலுவலக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர் என முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட ஊடகப் பிரிவு,மேலும் தெரிவிக்கிறது