பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.
எனினும் சபாநாயகரால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தப்படுமாயின் நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குச் செல்வோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹசீம் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வரலாற்றில் முதன் முறையாக பொருளாதார குற்றங்களால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவா அவதானம் செலுத்தியுள்ளது.
பல்வேறு வழிகளிலும் வீழ்ச்சியடைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேசத்தின் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமே தவிர , அந்த நம்பிக்கை முற்றாக சிதைவடையும் வகையில் செயற்படக் கூடாது.
கடந்த வாரம் 38 இராஜாங்க அமைச்சுக்களை நியமித்தமை இவ்வாறானதொரு செயற்பாடே ஆகும். அத்தோடு தற்போது முறையற்ற வரிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது.
கீழ்மட்டத்திலுள்ள மக்கள் மீது பாரிய வரி சுமை சுமத்தப்பட்டு , தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்மட்ட தரப்பினருக்கு வரி சலுகை வழங்கப்படுகிறது. இதனையே பொருளாதார குற்றம் என்று அடையாளப்படுத்துகின்றனர்.
இந்த பொருளாதார குற்றங்களுக்கு காரணமானவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவொன்றை அமைக்குமாறு சபாநாயகரிடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பல மாதங்கள் கடந்துள்ள போதிலும் இன்னும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் குறித்த தெரிவுக்குழு நியமிக்கப்படாவிட்டால் , நாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்குச் செல்வோம் என்றார்.