மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது – ஓமல்பே சோபித தேரர்

126 0

விகாரைகள், மத தலங்களுக்கான மின்கட்டணம் நூற்றுக்கு 555 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் துன்புறுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.

மின்கட்டணத்தை செலுத்த வழியில்லை. செலுத்த போவதுமில்லை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளின் நிர்வாகிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக எம்பிலியிடிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்கு நாட்டு மக்கள் உள்ளாகியுள்ளார்கள். பொருளாதார நெருக்கடியினால் மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை மென்மேலும் துன்புறுத்தும் வகையில் மின் மற்றும் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கும்,போசிப்பதற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் பௌத்த மதத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாட்டில் ஈடுப்பட்டுள்ளது.

விகாரைகள் மற்றும் ஏனைய மத தலங்களுக்கான மின்கட்டணட் 555 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன. மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடினாரா என்பதே கேள்விக்குறியாகவுள்ளது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விகாரைகளுக்கு கிடைக்கப்பெறும் தானம் மற்றும் நன்கொடைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மின்கட்டணம் அதிகரிப்பதற்கு முன்னர் மாதம் 58,000 ரூபாவாக காணப்பட்ட மின்கட்டணம் தற்போது 300,750 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையை எவ்வாறு செலுத்துவது.

மின்கட்டணத்தை செலுத்துவதற்கு வழியில்லை, செலுத்தவும் முடியாது. நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளின் நிர்வாகிகளும் ஒருமித்து செயற்பட வேண்டும். அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என்றார்.