முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மந்துவில் சந்தை வளாகத்தில் 1999 ஆம் ஆண்டு இன்று (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 23 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நினைவு நிகழ்வினை மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை அமைதியான முறையில் உயிரிழந்தவர்களை நினைவிற் கொண்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் பொதுச்சுடரினை உயிரிழந்த உறவுகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஏற்றியுள்ளதை தொடர்ந்து மலர்தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.
உயிரிழந்த மக்களின் நினைவு நிகழ்வினை மக்களாக மேற்கொள்ள எதிர்காலத்தில் நினைவிற்கொள்ள அரசாங்கம் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இனிவரும் காலங்களில் அரசாங்கம் எந்த தடையினையும் மேற்கொள்ளக்கூடாது இந்த இடத்தில் நினைவுத்தூபி ஒன்றினை அமைக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பிரதேச சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.