மருத்துவ மாணவனாக தேர்வாகி போராளியாக மாறிய தியாகி திலீபன்!

314 0

1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் தமிழீழத்திலே பிறந்த திலீபனின் பெயர் தான், இன்று  திலீபன் எனும் பெயர் கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களை உருவாக்கியிருக்கிறது. திலீபனின் இயற்பெயர் பார்த்திபன். மிகச் சிறந்த அறிவாளியான திலீபன் 1980 காலக்கட்டத்திலேயே மருத்துவ மாணவனாக தேர்வானவர். 80-களின் துவக்க காலங்களில் சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளை நேரில் பார்த்தவர், போராடால் இங்கு எதுவும் மாறாது என முடிவெடுத்து, படிப்பை நிறுத்திவிட்டு போராளியாய் மாறினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராய் உருவெடுத்தார். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு 1987-ம் ஆண்டு ஈழத்து மண்ணிலே இந்திய அமைதிப்படை நிலை கொண்டு, பல்வேறு அநீதிகளை தமிழர்களுக்கு அங்கு நிகழ்த்திய போது, இந்திய அமைதிப்படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அமைதி வழியில் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினார் அந்த 23 வயது இளைஞர்.

திலீபனின் ஐந்து கோரிக்கைகள்:

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ காவல் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

செப்டம்பர் 15 அன்று துவங்கிய உண்ணாவிரதம்

செப்டம்பர் 15, 1987 அன்று யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில் உண்ணாவிரதத்தை திலீபன் தொடங்கினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு ஆயுதம் மட்டுமே தூக்கி சண்டை போடத் தெரியும் என உலகம் நினைத்ததற்கு மாறாக, திலீபன் அகிம்சை பாடத்தினை சர்வதேசத்தினருக்கு நடத்த ஆரம்பித்தான். அதுவரை உலகில் யாரும் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்விட்டதாய் வரலாறு இல்லை.

தனக்கு என்ன நேர்ந்தாலும் தனக்கு சுய நினைவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரும் தனக்கு உணவோ, சிகிச்சையோ அளிக்கக் கூடாது என உறுதியாக சொல்லிவிட்டார் திலீபன். இந்த உண்ணாவிரதத்தில் தான் இறந்து விடுவேன் எனத் தெரிந்தும்,  மக்களுக்கு உண்மையை உணர்த்த, லட்சியத்திற்காக உயிர்விடத் துணிந்தவராய் உண்ணாவிரதக் களத்தில் இறங்கினார்.

தமிழீழம் என்பதை நாம் எதற்காகக் கேட்கிறோம் என்பதை திலீபன் உறுதியாகச் சொன்னார்.

“எமது நாட்டில் எமது ராணுவம் நிலைபெறும் வரை, எமது நாட்டில் நாம் நிலைபெறும் வரை, எமது சுதந்திரத்தை எவரும் உறுதிபடுத்த முடியாது. அதற்காகத்தான் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். அதற்காகத்தான் நாம் தமிழீழம் கேட்டுக் கொண்டிருக்கின்றோம். 

தமிழீழம் என்பது சகல அடக்குமுறைகளையும் உடைத்தெறிந்த ஓர் சமதர்ம சோசலிச தமிழீழமாகத் தான் மலரும். அதுவரை நாம் ஒருபோதும் எமது போராட்டத்தை கைவிடப்போவதில்லை. 

ஒன்றை மிகத் தெளிவாகவும் அறுதியாகவும் கூறுகின்றோம். நாம் மீண்டும் ஆயுதம் ஏந்துவோம். எமது மக்கள் அழிக்கப்படும் நிலை தோன்றுமானால் நாம் மீண்டும் ஆயுதம் ஏந்திக்கூட போராடுவோம்.”

 

திலீபன் அழைப்பது சாவையா?

திலீபன் புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர். குறிப்பாக உலகத்தில் உள்ள போராட்ட இயக்கங்களைப் பற்றியும், போராளிகளைப் பற்றியும் படித்துத் தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வமுடையவர். பாலஸ்தீனத்தின் போராட்டத்தின் மீது அவருக்கு மிகப்பெரிய ஈர்ப்பு இருந்தது. பாலஸ்தீனக் கவிதைகளைப் படித்து அதைப் பகிர்ந்து கொள்ளும் வழக்கமும் உடையவர். உண்ணாவிரத மேடையிலும் புத்தகங்களை வாசிப்பதற்கு கேட்டு வாங்கிக் கொண்டார். பாலஸ்தீன கவிதைத் தொகுப்பு அவருக்கு உண்ணாவிரத மேடையில் வாசிப்பதற்கு வழங்கப்பட்டது.

”திலீபன் அழைப்பது சாவையா? இந்த சின்ன வயதில் இது தேவையா? என்று கவிஞர் காசி ஆனந்தன் உண்ணாவிரத மேடையில் உருக்கமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். தொடர்ந்து திலீபனின் போராட்ட நாட்கள் முழுவதும் மேடைகளில் மாணவர்கள், பெண்கள், போராளிகள் என பலரும் கவிதைகளை ஒலிப்பெருக்கிகளில் வாசித்துக் கொண்டே இருந்தனர்.

தனது உண்ணாரவிரதத்தின் இரண்டாவது நாளில் பேசிய திலீபன், ”அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய மக்களே! நாளை நான் சுய நினைவுடன் இருப்பேனா என்று தெரியாது. அதனால் இன்று உங்களுடன் பேச வேண்டும் என்று விரும்பினேன்”

என்று பேசத் துவங்கினார். திலீபனின் அந்த பேச்சைக் கேட்டு கூட்டம் கண்ணீர் சிந்தியது.

முதல் இரண்டு நாட்களில் சில ஆயிரங்களாய் இருந்த மக்கள் கூட்டம், மூன்றாம் நாளிலிருந்து லட்சமாய் மாறியிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அமைப்பின் பொறுப்பாளனாய் மட்டுமே இருந்த தீலிபன் இப்போது தமிழினத்தின் பிரதிநிதியாகவே மாறிப் போனார். தமிழர்களின் குடும்பங்களின் ஒருவராய் மாறிப் போனார்.

லட்சியத்திறாக இறப்பேனே தவிர நீர் அருந்த மாட்டேன்

மூன்றாவது நாளின் போது நீராவது அருந்த வேண்டும் என பலரும் மேடையில் தொடர்ந்து வற்புறுத்திய போது, மைக்கை வாங்கிய திலீபன்,

”என்னை நீர், உணவு அருந்தும்படி கூறுவது என்னை அவமானப்படுத்துவது போல இருக்கிறது. இந்த மேடையில் நீராகாரம் எதுவும் எடுக்காமல் தான் உண்ணாவிரதம் ஆரம்பித்தேன். இறுதிவரை இந்த லட்சியத்தில் இருந்து மாறமாட்டேன். நீரே எடுக்காமல் இறப்பேனே தவிர இந்த அற்ப உயிரைக் காப்பாற்றுவதற்காக என் லட்சியத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கவே மாட்டேன்” 

என கூட்டத்தின் முன்பு உறுதியிட்டுக் கூறினார்.

உணவு அருந்தும்படி கூறாதீர் என பேசும் திலீபன்

ஒவ்வொரு முறையும் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வருவதாய் செய்தி பரவும்போதும் கூட்டத்தினரிடையே மகிழ்ச்சி பொங்கியது. திலீபன் காப்பற்றப்பட்டு விடுவான் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு ஒவ்வொரு முறையும் கிடைத்தது ஏமாற்றம்தான்.

4-வது நாளில் பேசிய திலீபன், “விளக்கு அணையும் முன் பிரகாசமாக எரியுமாம். அதுபோல் நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னால் தாராளமாகப் பேச முடிகிறது. எனக்கு விடை கொடுங்கள். போராடுவதற்குத் தயாராகுங்கள்.” என்று தன்னைப் பற்றி கவலைப்படாமல் மக்கள் போராட வேண்டும் என்று அழைத்தார்.

திலீபனுக்காக கண்ணீரைக் கொட்டிய மக்கள்

5-ம் நாளிலிருந்து திலீபன் சோர்வடைய ஆரம்பித்தார். நான்கு நாட்களாக பத்திரிக்கைகளையும், புத்தகங்களையும் வாசித்த திலீபனால் தற்போது எதையும் வாசிக்க முடியவில்லை. போர்வைக்குள்ளேயே புதைந்து கிடந்தார்.

ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. நல்லூர் கந்தசாமி கோயிலில் திலீபன் பேரில் தமிழ் மக்களால் அர்ச்சனைகள் செய்யப்பட்டு அவை மேடையில் குவிந்துகொண்டிருந்தன. திலீபன் எப்படியாவது காப்பாற்றப்பட்டு விட வேண்டும் தமிழர்கள் எல்லா கடவுள்களையும் வணங்கிக் கொண்டிருந்தனர்.

தன்னை நோக்கி கதறி அழுதவர்களுக்கும், தன்னை போராட்டத்தைக் கைவிடக்கோரி கேட்டுக் கொண்டவர்களுக்கும், எந்த சவாலையும் சமாளிக்கக் கூடிய தனது சிறு புன்னகையை பதிலாகக் கொடுத்துக் கொண்டிருந்தார் திலீபன். ஒவ்வொரு பேச்சுவார்த்தையின் போதும் எந்த தீர்வையும் தரவில்லை என சொல்லும் போது ”தான் இறுதிவரை போராட்டத்தைக் கைவிட மாட்டேன்” என்பதை மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார்.

மக்களிடையே எழுந்த எழுச்சி

8-வது நாளில் திலீபன் சோர்ந்து மயங்கிய நிலையிலேயே இருந்தார். உதடுகள் வறண்டு பிளந்து கிடந்தன. இப்போது தமிழீழப் பகுதிகள் முழுவதும் மக்கள் பல்வேறு போராட்டங்களை தொடங்கியிருந்தனர். பொதுமக்கள் ஆங்காங்கே உண்ணாவிரதம் மேற்கொள்ள ஆரம்பித்தனர். நல்லூர் வீதியில் கூட்டம் உச்சத்தை தொட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு இத்தனை மக்களின் ஆதரவு கிடைக்கும் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

திலீபன் மயங்கிய நிலையில், வாய்திறந்து பேசாமலேயே ஒரு மிகப்பெரும் விடுதலை உரையாடலை மக்களுடன் நிகழ்த்திக் கொண்டிருந்தான். 70-களின் துவக்கத்திலிருந்து ஆயுதம் சுமந்த மண் இப்போது மீண்டும் அகிம்சைப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தது.

பேருந்துகள், மாட்டு வண்டிகள், மிதிவண்டிகள் என கிடைக்கும் வாகனங்களில் எல்லாம் ஏறிவந்து மக்கள் யாழ்ப்பாணத்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் அருகே குவிந்து கொண்டிருந்தனர். தமிழ் மக்களிடையே ஒரு புரட்சிக்கான சரித்திரத்தை எழுதியவன் வயிறு ஒட்டிப் போய், உடம்பெல்லாம் சருகாய் காய்ந்து போய் கட்டிலில் துவண்டு கிடந்தான்.

சோகமும், கோபமும் கலந்துவிட்டிருந்த தமிழீழ மண்

9-ம் நாளில் உடல் உறுப்புகள் எல்லாம் செயலற்றுக் கிடக்க சிறு அசைவுகள் மட்டும் அவ்வப்போது இருக்கின்றன. 17 பாட சாலைகளிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அணிவகுத்து வந்து திலீபனைப் பார்த்து கண்கலங்கி அழுது கொண்டிருந்தனர்.

யாழ் கோட்டையிலிருந்த இந்திய அமைதிப் படையினர் வெளியே வர முடியாதவாறு மறித்து தமிழர்கள் மறியல் போராட்டத்தினை தொடங்கினார்கள். யாழ்ப்பாணம் முழுதிலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்தோர் வேலை நிறுத்தத்தினை மேற்கொள்ள முடிவெடுத்தனர். திலீபன் விரும்பிக் கேட்கும் பாடலான “ஓ..மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்கு தா! உன் பாதணிகளை எனக்கு தா! உன் ஆயுதங்களை எனக்கு தா!” எனும் பாடல் உண்ணாவிரதக் களத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. கூட்டத்தின் கண்ணீருக்கு மத்தியில், மக்கள் நாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினார்கள்.

10-ம் நாள் அணு அணுவாக மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்தான் திலீபன். காந்தியின் தேசம் அகிம்சைக்கு மதிப்பளித்து கோரிக்கைக்கு செவி கொடுக்கும் என நம்பியிருந்த தமிழர்களின் எண்ணம் தகர்ந்திருந்தது. ஈழத்தமிழர்களை கண்ணீரில் மிதக்க விட்ட திலீபனின் போராட்டம் தமிழ்நாட்டு தமிழர்களையும் எழுச்சி கொள்ள வைத்தது. திலீபனின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டின் சாலைகள் போராட்டங்களால் நிறைய ஆரம்பித்தன. திலீபன் தமிழீழத்திற்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழினத்தின் அடையாளமாய் மாறியிருந்தான்.

திலீபன் எனும் காவியத்தின் இறுதி அத்தியாயம்

11-ம் நாள் மாலை 4 மணியளவில் திலீபன் முற்றிலுமாக சுயநினைவை இழந்து கோமா நிலைக்கு சென்றுவிட்டார். சுவாசிக்கவே கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். அன்றிரவு திலீபனுக்கு பிடித்த ”ஓ மரணித்த வீரனே” பாடல் மீண்டும் ஒலிபரப்பப்பட்ட போது மக்கள் பெரும் அழுத்தத்தில் வெடித்து அழுதனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தின் 12-ம் நாள் செப்டம்பர் 26, 1987 அன்று காலை 10:48 மணிக்கு திலீபன் உயிர் பிரிந்தது. 265 மணிநேர உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தி முடித்து விடை கொடுத்துச் சென்றிருந்தான் திலீபன். தமிழீழப் பிரதேசம் முழுவதும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்ந்தது. திலீபனின் உடல் விடுதலைப் புலிகளின் கொடி போர்த்தப்பட்டு இறுதி மரியாதை செய்யப்பட்டு, அவருக்கு லெப் கேணல் பட்டம் வழங்கப்பட்டது.

திலீபன் இறப்பதற்கு முன் இறுதியாக ஆற்றிய உரையில் இதைத்தான் சொல்லியிருந்தார்.

”என் அன்பிற்கினிய மக்களே என்னால் பேச முடியவில்லை. பேச முடியாத நிலையில் இருந்தும் என்னை நீங்கள் தரும் உற்சாகம் பேச வைக்கிறது. நான் மீட்கப்பட முடியாத இடத்திற்கு போய்க் கொண்டிருக்கிறேன். நான் வாழ்நாள் முழுவதும் நேசித்த என் தேசத்து மக்களே, உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கிறேன். நீங்கள் அனைவரும் பரிபூரணமாக கிளர்ந்தெழ வேண்டும். இங்கே ஒரு மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும். மறைந்த போராளிகள் 650 பேருடன், 651வது போராளியாக நான் மேலே இருந்து மலரும் தமிழீழத்தை மகிழ்வோடு பார்ப்பேன். போராடத் தயாராகுங்கள். எனக்கு விடை தாருங்கள்.”

திலீபனின் உயிர்த்தியாகம் தமிழர்களை தட்டி எழுப்பியது. 23 வயதிலேயே இனத்துக்காக தன் வாழ்வை முடித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்ட திலீபன் ஒரு வரலாற்று தியாகச் சின்னமாக மாறினான்.

”நான் திலீபனை ஆழமாக நேசித்தேன். உறுதிவாய்ந்த ஒரு இலட்சியப் போராளி என்றரீதியில் அவன் மீது அளவுகடந்த பாசம் எனக்குண்டு. அவன் துடித்துச் செத்துக்கொண்டிருந்தபோதெல்லாம். என் ஆன்மா கலங்கும். ஆனால் நான் திலீபனை ஒரு சாதாரண மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை எரித்துக் கொண்டிருக்கும் ஒரு இலட்சிய நெருப்பாகவே நான் அவனைக் கண்டேன்.” 

என்று திலீபனைப் பற்றிய அஞ்சலியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டார்.

ஒரு திலீபன் மறைந்தான், ஆனால் உலகில் தமிழர்கள் வசிக்கும் நாடுகளெங்கும் ஆயிரமாயிரம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு திலீபன் என்று பெயர் சூட்டினர். அந்த தியாக இளைஞனின் பெயரை தன் அடையாளமாய் தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டது. 

தமிழ்நாட்டில் நீங்கள் உங்கள் வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் உங்கள் காதுகளில் கேட்ட, இப்போதும் கேட்கிற ’திலீபன்’ எனும் பெயரைக் கொண்ட இளைஞர்களின் பெயர்க்காரணத்துக்குப் பின்னால் இந்த இளைஞனின் மாபெரும் தியாகம் இருக்கிறது.

33 ஆண்டுகள் கடந்துவிட்டன..இன்னமும் வானத்திலிருந்து பசியோடு பார்த்துக் கொண்டிருக்கிறான் தியாக தீபம் திலீபன்!