நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட வகையில் சதித்திட்டம் மூலம் அழிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே பெருமளவான மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இது வரையில் ஐ.நா.வில் போர்க்குற்றம் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மாத்திரமே பேசப்பட்டு வந்தது. எனினும் தற்போது இலங்கையின் பொருளாதார பேரழிவு தொடர்பிலும் , சிறார்களின் போசாக்கின்மை தொடர்பிலும் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொருளாதாரப் பேரழிவிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமை ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
நாட்டு மக்கள் ஒரு வேளை உணவைப் பெறுவதில் கூட கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் 38 இராஜாங்க அமைச்சுக்களுக்கும் , மேலும் 12 அமைச்சரவை அமைச்சுக்களுக்குமான தேவை என்ன? இவ்வாறான செயற்பாடுகளின் காரணமாகவே பொருளாதாரத்தை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.
நாட்டு பொருளாதாரம் திட்டமிட்ட சதியால் அழிக்கப்பட்டு, 22 இலட்சம் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. எனவே பாரிய அமைச்சரவையை நியமித்து பொருளாதாரத்தை மேலும் சீரழித்து மக்களின் பணத்தை வீணடிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தின் கைப்பாவையாக மாறிவிட்டார். பொருளாதாரத்தை இந்தளவிற்கு சீரழித்தவர்களுக்கும் , சிறுவர்களுக்கு மந்த போசனை ஏற்படுவதற்கு காரணமாகவுள்ளவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக உள்ளது.
பிரேமலால் ஜயசேகர எம்.பிக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமைக்காக ரணில் விக்ரமசிங்க வெட்கப்பட வேண்டும். இன்று குற்றவாளிக்கு அவரே நியமனம் வழங்குகிறார் என்றார்.