மன்னார் மாவட்டத்திற்கு என தனித்துவமான கலை கலாச்சாரம் உண்டு. எனினும் மன்னார் மாவட்டம் தொடர்பாக தரக் குறைவாக பேசுவதற்கு இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும், அவரது கருத்துக்கு கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் இன்று (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், புதிதாக இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மன்னார் மாவட்டம் தொடர்பாக கோபத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்தை ஊடகங்கள் ஊடாக தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தை ஓர் களியாட்ட இடமாகவும், குறிப்பாக தன்னை சிறு வயதில் கருவாடு காய வைப்பதற்கு மன்னாரிற்கு அனுப்ப உள்ளதாக தன்னை பயமுறுத்தி வளர்த்ததாகவும், அவர் கூறியுள்ளார்.
அவரது கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
மன்னார் மாவட்டம் மிகவும் கலை, கலாச்சார பண்புகள், கடல் வளம், விவசாய வளம் அனைத்தோடு பொருந்தியதாக அமைந்துள்ளது.
தற்போது கல்வியில் தலை சிறந்து விளங்கி காணப்படுகின்றது. தற்போதைய உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கடந்த காலங்களை விட இம்முறை உயர்ந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம், மடு திருத்தலம் ஆகிய இரு பழமை வாய்ந்த திருத்தலங்கள் உள்ளன.
எனவே மன்னார் மாவட்டத்தின் கலை கலாச்சார பண்புகள் தெரியாமல், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஊடகங்கள் முன் கதைப்பது கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு, இப்படிப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கிய ஜனாதிபதி அதனை பரிசீலிக்க வேண்டும்.
குறித்த பெண் சில காலங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் கருத்தை முன்வைத்தார்.
நாட்டில் கஞ்சா வளர்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். கொழும்பை இரவு நேர களியாட்ட வலயமாக மாற்ற வேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசி இருந்தார்.
அவருடைய செயல்பாடுகள் தொடர்ச்சியாக இவ்வாறு இருக்கும் போது அவருக்கு இராஜாங்க அமைச்சு பொறுப்பு வழங்கியமை குறித்து ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.