கொழும்பு – கோட்டை மிதக்கும் சந்தையை மேம்படுத்த நடவடிக்கை

119 0

சுற்றுலாப்பயணிகளை அதிகளவில் கவரக் கூடிய இடமாக கொழும்பு – கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சேவைகளை வழங்குவதற்கு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான திட்டம் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று ஜனாதிபதி அலுவலக பிரதானியும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நவீன உலகிற்கு பொறுத்தமான புதிய சிந்தனைகளுடன் கூடிய புதிய போராட்ட களம் இளைஞர் சமூகம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து கோட்டை மிதக்கும் சந்தை வளாகத்தில் உருவாகும்.

கலை, இலக்கியம், தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றை சுதந்திரமாக சந்திக்கவும் சுதந்திரமாக பரிமாறிக்கொள்ளவும் கலந்துரையாடவும் கூடிய இடம் இளைஞர்களுக்கு உருவாக்கப்படும். அதுமட்டுமின்றி கலை கண்காட்சிகள், இசை விழாக்கள் நடத்தக்கூடிய இடங்கள், உணவகங்கள் போன்றவை இங்கு நிர்மாணிக்கப்படும்.

இளைஞர்கள் தங்கள் திறமைக்கு பொருளாதார மதிப்பை பெறக்கூடிய இடமாக இது திகழும். அதுதொடர்பான சேவை வசதிகளை வழங்க அரசு செயல்பட்டு வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களில் பெரும்பான்மையானவர்கள் புதிய சிந்தனைகளை கொண்ட புத்தாக்கம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் இங்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

இளைஞர்கள் குழுவொன்று முப்பரிமாண தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி செயலக கட்டிடத்தை நோக்கி தமது போராட்டத்தை முன்னெடுத்தமை சிறந்தவொரு விடயமாகும். இவ்வாறான புத்தாக்க சிந்தனைகளை கொண்ட இளைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் இடமாக இந்த இடம் அமையும்.

உலகின் பல நாடுகளில் இவ்வாறான இடங்கள் காணப்படுகின்றன. அவற்றை பார்வையிட அதிகளவான சுற்றுலாப் பயணிகள் கவரப்படுகின்றனர். மிதக்கும் சந்தை வளாகத்தையும் அவ்வாறான இடமாக மாற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான சேவைகளை வழங்குவதற்கு அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்படும். இது தொடர்பான திட்டம் விரைவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்றார்.

இந்தத் திட்டம் தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவொன்று ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்னாயக்கவிடம் தமது விருப்பத்தினை இதன் போது வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.