கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டு விழா

162 0
கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தை மேற்கொள்வோர் பண்டைய காலம் தொடக்கம் முன்னெடுக்கும் ஏர்பூட்டு விழா, மட்டக்களப்பு  -கொக்கட்டிச்சோலையில் நேற்று (13) நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் கோவிலின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலையில் உள்ள வயல் பகுதியில் நேற்றுக் காலை இந்நிகழ்வு நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரருக்கு தேர் உற்சவம் நிறைவடைந்ததும் மழைபெய்யும் என்றும் அக்காலப்பகுதியில் விவசாயிகள் தங்களது வயல் நிலங்களில் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும் காலம்காலமாக நடைபெற்று வருகின்றது.

இக்காலப்பகுதியில் கொக்கட்டிச்சோலையில் ஏர்பூட்டப்பட்டதை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் விவசாயிகள் தமது நெற்செய்கையை ஆரம்பிப்பர்.

இவ்வாறான நடைமுறைகள் யுத்த காலத்தில் இல்லாமல்போயிருந்த நிலையில், மீண்டும் இந்த பண்டைய நடைமுறை கொண்டுவரப்பட்டு, அது தொடர்பான நிகழ்வுகள், கொக்கட்டிச்சோலை தான்தோறீஸ்வரர் கோவிலின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றன.

தான்தோறீஸ்வரர் கோவிலின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்களின் தலைமையில், விசேட பூஜைகள் நடைபெற்று, ஏர்பூட்டு உழும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோவில் நிர்வாக சபையினர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

எமது பாரம்பரியங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக எருதைக்கொண்டு இந்த ஏர்பூட்டும் நிகழ்வை நடத்துவதாக இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.