வயம்ப எல திட்டம் ஆரம்பித்து வைப்பு

288 0

வடமேல் மாகாணத்திற்கு நீரைப்பெற்றுக்கொடுக்கும் பாரிய அபிவிருத்தித் திட்டமாக வடமேல் வாய்க்கால் (வயம்ப எல) திட்டம் இன்று முற்பகல்ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீஓய மற்றும் ஹக்வட்டுனா ஓய நீர்த்தேக்கங்களுக்கு மகாவெலி நீரை திசை திருப்பி குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திலுள்ள பல குளங்களை வளப்படுத்தி விவசாயத்துறையை மேம்படுத்துவதையும் நீர் பற்றாக்குறை காரணமாக ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதையும் நோக்காகக் கொண்டு வடமேல் கால்வாய் திட்டம் மகாவெலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் சுமார் 105,000 ஏக்கருக்கு மகாவலி நீரை வருடாந்தம் குருநாகலை மாவட்டத்தின் வடக்கு பிரதேசத்திற்குப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பிரதேசத்திலுள்ள 300 சிறிய குளங்கள் மற்றும் 08 பிரதான குளங்கள் மகாவலி நீரைப்பெற்றுக்கொள்வதுடன் ஹக்வட்டுனாஓய நீர்த்தேக்கத் திட்டத்தின் கீழ் 2500 ஹெக்டெயார் விவசாயக்காணிகள் மற்றும் மீஓய நீர்த்தேக்கத்திட்டத்தின் கீழ் 3500 ஹெக்டெயார் விவசாயக்காணிகள் உட்பட 12,000 க்கும் மேற்பட்ட விவசாயக்காணிகளில் இரண்டு போகங்களிலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசனத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இத்திட்டத்திற்கு சுமார் 16 ஆயிரம் மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இத்திட்டம் 2024 ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு அமைச்சர்களான எஸ்.பி. நாவின்ன, அநுரபிரியதர்சன யாப்பா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அகிலவிராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, பிரதி அமைச்சர்களான லக்ஷ்மன் வசந்த பெரேரா, தாரானத் பஸ்நாயக்க, வட மேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்னாயக்க, முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.