இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் இயங்கி வரும் பட்டாசு ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல ரக பட்டாசுகளை பெட்டிகளில் அடைத்து கிப்ட் பாக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பலதரப்பட்ட வெடிகளை ஒரே பெட்டிக்குள் வைத்து விற்பது சம்பந்தமாகவும் பல்வேறு நிபந்தனைகளை வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் கிப்ட் பாக்ஸ்களுக்கு தமிழகம் முழுவதும் வரவேற்பு உள்ளது. ரூ.200 முதல் ரூ.5 ஆயிரம் விலையிலான கிப்ட் பாக்ஸ்கள் சிவகாசி கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கிப்ட் பாக்ஸ்கள் தற்போது சிவகாசி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்களில் வீடுகளில் தயாராகி வருகிறது. மூட்டை, மூட்டையாக பட்டாசுகளை வீடுகளில் இறக்கி வைத்துவிட்டு பல பட்டாசு ஆலைகள், அதற்கான பெட்டிகளையும் வீட்டில் உள்ள பெண்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கும் எத்தனை பட்டாசுகள் போட வேண்டும் என்ற அட்டவணைப்படி பட்டாசுகள் போட்டு அடுத்த நாள் கொடுத்து விடுகிறார்கள். இதுபோன்ற சட்ட விரோத செயலால் வெடிவிபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆனால் கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் பல கிராமங்களில் இது போன்ற செயல்கள் தற்போது அதிகரித்துள்ளன. இதுகுறித்த புகார்கள் தெரிவிக்கப்பட்டபோதும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.