இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வெளிநாடு செல்ல பயணத் தடை விதிப்பதா ?

106 0

நீதி மன்ற அவமதிப்பு தொடர்பில், இரு சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ள இரு வழக்குகள் தொடர்பில், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு வெளிநாடு செல்ல பயணத் தடை விதிப்பதா உள்ளிட்ட இடைக்கால நிவாரணங்கள் தொடர்பில், மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்மானம் எதிர்வரும் 29 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க அழைப்பாணை அனுப்புவதா இல்லையா என்பது குறித்தும் அன்றைய தினம் நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவிக்கும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.

புத்தளம் மாவட்ட, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக, நீதிமன்றை அவமதித்ததாக, அரசியலமைப்பு விதிவிதாங்களின் கீழ் சட்டத்தரணிகளான விஜித்த குமார மற்றும் பிரியலால் சிரிசேன ஆகியோர் இரு வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி காலி முகத்திடல் போராட்டக்காரர்களை தாக்கியமைக்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், சனத் நிஷாந்த சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளதாகவும், அது குறித்த விசாரணைகள் இன்னமும் நிறைவடையாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவ்வாறான நிலையில் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் திகதி அன்று, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சனத் நிஷாந்த, இலங்கையின் நீதித்துறை குறித்து, குறிப்பாக நீதித்துறை உத்தியோகத்தர்கள் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்ததாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்த குறித்த கருத்துக்கள் நீதிமன்றை அவமதிக்கும் வகையில் உள்ளதாக என மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், இந்த கருத்துக்கள் நீதித்துறைக்கும், நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் கருத்துக்கள் நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனால் அரசியலமைப்பின் 105(3) உறுப்புரையின் கீழ் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவை தண்டிக்க உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்

குறித்த இரு வழக்குகளும் இன்று(13) மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி நிசங்க பந்துல கருணாரத்ன தலைமையிலான் நீதிபதி ஆர். குருசிங்கவை உள்ளடக்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

நேற்று இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கள் இடம்பெற்றன. இதன்போது, மனுதாரர்களில் ஒருவரான சட்டத்தரணி பிரியலால் சிரிசேன சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய, நீதிமன்ற கெளரவத்தை பாதுகாப்பது முக்கியமானது என சுட்டிக்காட்டி வாதங்களை முன் வைத்தார்.

கடந்த 23 ஆம் திகதி , மனுவின் பிரதிவாதி அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்கள் மற்றும் நீதிவான்கள் தொடர்பில் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமான அபாண்டமான விடயங்களை முன் வைத்து நீதிமன்றை அவமதித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய குறிப்பிட்டார்.

மக்கள் போராட்டங்களின் இடையே கைது செய்யப்பட்ட நபர்களுக்கு நீதிவான்கள் பிணையளித்தை, சனத் நிஷாந்த விமர்சித்துள்ளதாகவும் இது சட்டத்தின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் செயர்பாடு எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய வாதிட்டார்.

இதன்போது மற்றொரு மனுதாரராண சட்டத்தரணி விஜித்த குமார சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சனத் நிஷாந்தவின் கருத்துக்கள் ஊடாக நீதிவான்களுக்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

சனத் நிஷாந்தவின் கருத்துக்களில், நாட்டில் சட்டம் அமுல் செய்யப்படுவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனூடாக அவர் நாட்டின் நீதிமன்ற அதிகாரத்தை கொச்சைப்படுத்தியுள்ளதாகவும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

சனத் நிஷாந்த நீதிமன்றம் மீதுள்ள மக்கள் நம்பிக்கையை குழைக்கும் விதமாக கருத்து வெளியிட்டுள்ளதாகவும் ஜனனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வாதிட்டார்.

இந் நிலையிலேயே விடயங்களை ஆராய்ந்த மேன் முறையீட்டு நீதிமன்றம், மனுக்களில் கோரப்பட்டுள்ள இடைக்கால நிவாரணம் மற்றும் அழைப்பாணை அனுப்புவதுப் குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 29 ஆம் திகதி அறிவிப்பதாக அறிவித்தது.