ரணிலை ஜனாதிபதியாக்கினோம் என பொதுஜன பெரமுனவினர் தெரிவிப்பது கட்சிக் கொள்கைக்கு விரோதமானது

109 0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியில் ஒன்றிணைய இதுவரை தீர்மானிக்கவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை தவிர்த்து ஏனைய திட்டங்கள் ஏதும் கிடையாது என முன்னாள் அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒன்றிணைந்து செயற்பட முடியாது என்பதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகபெரும,டிலான் பெரேரா மற்றும் ஜி.எல் பீரிஸ் உள்ளடங்களாக 13 பேர் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகிறோம்.

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 13 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் குறிப்பிடுவது சிறுபிள்ளை தனமாகவுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கினோம் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது கட்சியின் அடிப்படை கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது.

எமக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது ஏனெனில் நாங்கள் கட்சியின் கொள்கைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரசாங்கத்தில் தவறான தீர்மானங்களினால் பொதுஜன பெரமுன அரசியல் ரீதியில் மேலும் பலவீனமடையும்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியில் ஒன்றிணைய இதுவரை தீர்மானிக்கவில்லை.

எமது அரசியல் ரீதியிலான தீர்மானத்தை உரிய நேரத்தில் அறிவிப்போம்.மக்களால் கடுமையாக விமர்சிக்கும் தரப்பினருடன் ஒருபோதும் ஒன்றிணைய போவதில்லை .

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.ஜனாதிபதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர்த்து அவரிடம் ஏனைய பொருளாதார திட்டங்களும் கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நாட்டு மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.ஆகவே இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் பாராளுமன்றுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம் என்றார்.