குற்றவாளிகளை அமைச்சரவைக்கு நியமித்து ஜனாதிபதி நாட்டுக்கு வழங்கப்போகும் செய்தி பாரதூரமானது!

111 0

மோசடி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டிருக்கும் நபர்களை அமைச்சரவைக்கு நியமித்து ஜனாதிபதி நாட்டுக்கு வழங்கப்போகும் செய்தி பாரதூரமானதாகும்.

அத்துடன் நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் மக்களின் நம்பிக்கையை வெற்றிகாெள்ளவேண்டி சந்தர்ப்பத்தில், அரசாங்கம் மேற்கொண்டுவரும் செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு அளவிடமுடியாது என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் நியமனம் மற்றும் அவர்களின் வரப்பிரசாதங்கள் தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டிஆரச்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை பாரிய பொருளாதார பிரச்சினைக்கு மூழ்கி இருக்கும் நேரத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பாரியளவில் நியமித்துக்கொண்டு அரசியல் கட்சிகளையும் அரசியல்வாதிகளையும் மகிழ்ச்சிப்படுத்தி மற்றும் அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களுக்கு ஏற்படும் சுமை பாரியதாகும்.

அமைச்சர்கள் தங்களுக்குரிய சம்பளம் மாத்திரே பெற்றுக்கொள்வதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா தெரிவித்திருந்த கருத்தை நாங்கள் மதிக்கின்றோம். என்றாலும் அவ்வாறு செய்ய முடியாது என பல அமைச்சர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அத்துடன் ஜனாதிபதியின் செயலாளரின் 2010/05/14 திகதிய சுற்றுநிருபத்தின் பிரகாரம் அமைச்சர்களின் பணியார் தொகுதிக்கு பிரத்தியேக அதிகாரிகள் 15பேர் உரித்தாவதுடன் அமைச்சருக்கும் அவரது பணியாளர் குழாத்துக்கும் 6உத்தியோகபூர்வ வாகனமும் அதற்கு தேவையான பெற்றாேல் வாகனத்துக்கு 750 லீட்டரும் டீசல் வாகனத்துக்கு 600லீட்டரும் விநியோகிக்கப்படும். அதேநேரம் அமைச்சருக்கும் அவரது பிரத்தியேக பணியாளர் குழாத்துக்கு தேவையான தொலைபேசி மற்றும் அதற்கு தேவையான செலவு அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன் ஜனாதிபதியின் கடந்த 9ஆம் திகதி சுற்று நிருபத்துக்கமைய அமைச்சர்களின் வரப்பிரசாதங்கள் ஓரளவுக்கு வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

என்றாலும் அது பணியாளர் குழாத்தில் 4பேரை குறைத்தல், செயலாளர் ஒருவர் நியமிக்காமல் இருத்தல் மற்றும் ஒரு வாகனத்தை குறைப்பதற்கு வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரம் இங்கு பாரிய விடயமாக இருப்பது அமைச்சர் சம்பளம் எடுப்பது அல்ல.

அவரது பணியாளர் குழாத்தினை நடத்துதல் மற்றும் வாகன வசதிக்காக ஏற்றுக்கொள்ளவேண்டிய பாரிய செலவாகும்.

எனவே செயல்திறன் குறைவு என அரச ஊழியர்களை குறைப்பதற்கு பிரேரிக்கும் ஜனாதிபதி, இந்தளவு பாரிய அமைச்சரவையை நியமித்து, எவ்வாறு அதனை நியாயப்படுத்துவது என்பது விசாரிக்கப்படவேண்டிய விடயமாகும்.

அதேபோன்று மோசடி குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு. நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டிருக்கும் நபர்கள் அமைச்சரவைக்கு நியமித்து நாட்டுக்கும் மக்களுக்கும் வழங்கப்போகும் செய்தி பாரதூரமானதாகும்.

அத்துடன் மக்கள் பிரதிநிதிகளின் செயற்திறனை அளவிடுவதற்கு முறையொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்.

இவ்வாறு இருக்கையில், நாடு முகம்கொடுத்துள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் மக்களின் நம்பிக்கையை வெற்றிகாெள்ளவேண்டி சந்தர்ப்பத்தில், அரசாங்கம் மேற்கொள்ளும் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பை அளவிடமுடியாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம். இதுதொடர்பாக ஜனாதிபதியின் விசேட கவனம் செலுத்தப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.