தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடர்பாக ஜனாதிபதியினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது, எனினும் அந்த வாக்குறுதியாலும் ஏமாற்றப்பட்டு இருப்பதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நடந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய கைதிகள் தினத்தையொட்டி 417 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஒரு தமிழ் அரசியல் கைதியும் விடுவிக்கப்படவில்லை.
46 தமிழ் அரசியல் கைதிகள் வீட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. கடந்த மாதம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அந்த அடிப்படையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அதுவும் இடம்பெறவில்லை தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடர்பாக ஜனாதிபதியினால் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதியாலும் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.
இந்த விடயம் சம்பந்தமாக அனைத்து தரப்பினரும், தமிழ் பேசும் மக்களுடைய பிரதிநிதிகள் இந்த விடயத்தில் உடனடியாக செயல்படுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுவரும் இளைஞர்களில் ஆறு பேரின் உடல்நிலை மோசமடைந்து வெலிக்கடை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் தொடர்புகொண்டோ அல்லது ஏதாவதொரு பொறிமுறையை பயன்படுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க துறைசார்ந்தவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்றார்.