தழிழர் தாயக பரப்பில் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன

116 0

பாணமை முதல் பொலிகண்டி வரை தமிழ் மக்களின் தாயக பரப்பில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் தொல்லியல் மரபுகளும் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையொன்றில் இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுற்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை ஈழத்தமிழர்கள் தமக்கான நியாயமான உரிமையும், நீதியையுமே கோரி நிற்கின்றனர்.

ஜெனிவா, தமிழ் மக்களுக்கான சாதகமான தீர்மானங்களை இதுவரை எடுக்காவிட்டாலும் தமிழ் மக்களின் விவகாரங்களை பேசும் ஒரு மேடையாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த 1974ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ் மக்களின் ஒவ்வொரு பிரச்சினைகள், மனித உரிமை மீறல் செயற்பாடுகள் அனைத்தும் ஜெனிவா வரை கொண்டு செல்லப்படுவதோடு சர்வதேச நாடுகளும் இலங்கை விவகாரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானம் செலுத்துகின்றன.

சர்வதேசத்தில் இலங்கை மனித உரிமை விவகாரமானது தமிழ் மக்களின் பிரச்சனைகளும் உரிமை மீறல்களும் என தனித்தனியான விவகாரங்களாக பார்க்கப்பட்ட போதிலும் தற்போது தென்னிலங்கை அரசியல் பிரச்சனைகளும் உரிமை மீறல் விவகாரங்கள் உள்நுழைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஒட்டுமொத்த விவகாரமாக உள்நோக்கப்பட்டு வரும் நிலையில் எமது தரப்புக்கான நீதிகள் இழுத்தடிப்பு செய்யப்படும் அல்லது இன்னும் காலதாமதத்தை தோற்றுவிக்க கூடிய எண்ணப்பாட்டையே தற்போதைய சூழல் முன்நகர்த்தி செல்கின்றது.

தற்போதைய பொருளாதார பிரச்சினையால் எமது தாயகப்பரப்பில் தொழிலின்மை மற்றும் அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தால் நாள் தோறும் தமிழ் மக்கள் சொல்லொன்னா துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பானமை முதல் பொலிகண்டி வரை தமிழ் மக்களின் தாயக பரப்புக்களில் வரலாற்று இடங்களும், தொல்லியல் மற்றும் மரபுரிமைகளும், வரலாற்று சமய வழிபாட்டு தலங்களும், அதன் தொன்மைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு திட்டமிட்டே அழிக்கப்பட்டும் சூரையாடப்பட்டு வருகின்றது.

அதேவேளை மாணவர்கள் மத்தியில் திட்டமிடப்பட்ட வகையில் போதைவஸ்து பாவனை அதிகரிக்க செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் எதிர்காலமும் சூனியமாகியுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ரீதியில் எமது மாவட்டத்திற்குள்ளே கனகர் கிராம மக்களின் மண்மீட்பு போராட்டம், வட்டமடு மேச்சல் தரை காணி விவகாரம், திருக்கோவில் இல்மனைட் அகழ்வு பிரச்சனை, கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பான பிரச்சனை என தமிழ் மக்கள் திரும்புகின்ற திசையெல்லாம் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு செயல் வடிவம் கொடுக்கப்பட்டு தங்களின் வங்குரோத்து அரசியலை வளர்த்துக்கொள்ள கங்கணம் கட்டுகிறார்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.