பரீட்சை பெறுபெறுகள் சிறப்பாக அமைந்து விட்டால் கொண்டாடித்தீர்க்கும் கல்வி சமூகம் சித்தியடையாத மாணவர்களைப்பற்றி என்றுமே சிந்திப்பதில்லை. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைகள் பெறுபேறு என்றால் அது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பேசப்படும். ஏனென்றால் அப்பரீட்சை பல மாணவர்களின் சாதாரண தர அல்லது உயர்தர பரீட்சை பெறுபேறுகளை தீர்மானிப்பதாக அமைவதில்லை. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் இடைவிலகிச்செல்வதில்லை.
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் அப்படியில்லை. இதில் சித்தியடையத்தவறும் மாணவர்களை அடுத்த கட்டத்துக்கு எவ்வாறு நகர்த்தி செல்வது என்பது குறித்து பெற்றோர்களே மன உளைச்சல்களுக்கு ஆளாகின்றனர். பாடசாலை சமூகம் இவர்களை கண்டு கொள்வதில்லை. இரண்டாம் தடவை நம்பிக்கையுடன் பரீட்சை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் அதை தவிர்க்கின்றனர். குடும்ப சூழ்நிலை, நண்பர்களின் ஆலோசனைகள், மீண்டும் தம்மை பரீட்சைக்கு தயார்ப்படுத்துவதில் உள்ள சிரமம் , இப்படிக் கூறிக்கொண்டே போகலாம். பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில் தொழிற்பயிற்சிகளை பெறத்தக்கதாக அவர்களுக்கு சரியான வழிகாட்டல்களும் இல்லை.
அதிலும் உயர்தர பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தி பெறாத மாணவர்களின் நிலைமைகள் வேதனைக்குரியன. 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்திருக்கின்ற நிலையில், மூன்று பாடங்களிலுமே சித்தியடையாத மாணவர்களைக் கொண்டிருக்கக் கூடிய பாடசாலைகள் அதைப்பற்றி கதைப்பதில்லை அல்லது கவலைப்படுவதில்லை. அந்த மாணவர்களை அழைத்து அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகின்றீர்கள் என ஒரு ஆறுதல் வார்த்கைளைக் கூட கேட்பதில்லை.
2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் தனியார் விண்ணப்பதாரிகள் அடங்கலாக சுமார் 10 ஆயிரம் பேர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தி பெற்றுள்ளனர். அதே வேளை 22,928 பேர் மூன்று பாடங்களிலும் சித்தி பெறவில்லை. உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் இஸ்ட் புள்ளிகளே மாணவர்களின் பல்கலைக்கழக உள்வாங்கலை தீர்மானிக்கின்றது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டு சித்தியடைந்தவர்களின் சுமார் 42,500 பேர் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வருடந்தோறும் சராசரியாக இந்த எண்ணிக்கையான மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர். அதே வேளை ஒவ்வொரு வருடமும் உயர்தர பரீட்சைகளில் மூன்று பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்களின் எண்ணிக்கை சராசரியாக 21 ஆயிரமாக இருக்கின்றது. எந்தளவுக்கு பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் உள்வாங்கப்பட்டு பட்டதாரிகள் உருவாகின்றார்களோ அதில் அரைவாசி தொகையான மாணவர்களின் எதிர்காலம் குறித்த எந்த சிந்தனைகளும் இல்லாத கல்விக்கொள்கையோடு எமது நாடு உள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகவுள்ளது.
பல்கலைக்கழக உள்ளீர்ப்புக்கு உரிய பெறுபேறுகளைக் கொண்டிராத மாணவர்களுக்கு எவ்வாறு தொழிற்கல்வியைப் பெற்றுக்கொடுப்பது என்ற பொறிமுறைகளை வகுப்பதில் இலங்கை தோல்வி கண்டுள்ளது. நாடஙெ்கினும் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களை எத்தனைப் பேர் உரியவாறு பயன்படுத்திக்கொள்கின்றார்கள் என்பது ஆய்வுக்குரியது. ஏனென்றால் வருடந்தோறும் மேற்படி தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான நிதியால் அதற்கான பயனை அரசாங்கம் பெற்றுக்கொள்கின்றதா என்பது முக்கியம்.
இலங்கை கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு எந்த அரசாங்கத்துக்கும் நேரமிருப்பதில்லை. ஏனென்றால் யுத்தம் முடிவுற்ற பிறகும் கூட ஸ்திரமான அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் இல்லாத காரணத்தினால் அதைப்பற்றிய சிந்தனைகள் அரசியல்வாதிகளிடம் இல்லை. தற்போதைய பொருளாதரா நெருக்கடிகள் காரணமாக, அரச ஊழியர்களுக்கு ஐந்து வருட விடுப்பில் வெளிநாட்டு அவர்களை அனுப்பி வைக்கும் திட்டமும் அப்படியானது தான். தமக்கு டொலர்கள் வந்தால் போதும் என்ற நிலைமையே அரசாங்கத்துக்கு உள்ளது.
இந்த அரச ஊழியர்களில் பட்டதாரி ஆசிரியர்களும் அடங்குகின்றனர். இவர்களில் ஒரு தொகையினர் வெளிநாடு சென்று விட்டால் பின்பு எவ்வாறு கல்வியை மேம்படுத்துவது? பாடத்திட்டங்களுக்கு ஏற்ப அடுத்து ஒரு பட்டதாரி ஆசிரியர் உருவாகி வரும் காலகட்டம் வரை கல்வித்துறையில் ஏற்படும் வீழ்ச்சிக்கு யார் பதில் கூறப்போகின்றனர்? மட்டுமின்றி தற்போதைய சூழலில் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறும் பட்டதாரிகள், இலங்கையில் அரச தொழில் செய்யும் மனநிலையில் இருப்பார்களா? என்றெல்லாம் யோசிக்க வேண்டியதாகவுள்ளது.
ஆனால் இப்போதைய காலகட்டம் மிகவும் நெருக்கடியாகவுள்ளது. அதுவும் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகள், தமது கல்வி நடவடிக்கையை முன்னெடுப்பதில் கடும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
கடும் பொருளாதா நெருக்கடி காரணமாக கல்வியை இடைநடுவில் கைவிட்டு மலையக சிறுவர்கள் வேலைக்கு செல்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமயா ஒபகட்டா தெரிவித்திருக்கின்றார். கடந்த வருடம் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கள நிலைவரங்களை அவதானித்திருந்தமை முக்கிய விடயம். வறுமையே இதற்கு பிரதான காரணங்களாகின்றன.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டரீதியாக தடை செய்யப்பட்டிருந்தாலும் வறுமையின் முன்பதாக சட்டத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. கட்டாயக் கல்வி என கல்வி அமைச்சு சுற்றுநிருபங்களை கொண்டு வந்தாலும் அதை அமுல்படுத்துவதற்குரிய சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கவில்லை. பரீட்சையில் மாத்திரமின்றி வாழ்க்கையிலும் இந்த மாணவர்கள் சித்தியடைய முடியாத ஒரு நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் தனது நாட்டின் மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கொள்கைகளையும் அவர்கள் கற்பதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயாத எந்த அரசாங்கமும் தோல்வி கண்ட அரசாங்கம் தான் !
சிவலிங்கம் சிவகுமாரன்