கிளிநொச்சியில் அம்மாச்சி உணவகம்

411 0

01-1-e1468594404665வடக்கின் பாரம்பரிய உணவகமான அம்மாச்சி கிளிநொச்சியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பணிமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதனை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று வெள்ளிக்கிழமை (15.07.2016) திறந்துவைத்துள்ளார்.

போசாக்கான பாரம்பரிய உணவுகளை நுகரும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு விவசாய அமைச்சு மாவட்டம் தோறும் அம்மாச்சி என்ற பெயரில் வடக்கின் பாரம்பரிய உணவகங்களை அமைத்து வருகிறது. ஏற்கனவே முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் திறந்துவைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக இயங்கிவரும் நிலையில், தற்போது கிளிநொச்சியிலும் அம்மாச்சி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

5.5 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் உணவுகளைத் தயாரித்து விற்பனை செய்யும் உரிமம் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுடரமுதம், தேனமுதம் ஆகிய மாதர் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பாரம்பரிய உணவு வகைகள் நுகர்வோருக்கு உடனுக்குடன் தயாரித்துப் பரிமாறப்பட இருப்பதாகவும், எந்தவிதமான செயற்கை நிறமூட்டிகளோ, செயற்கைச் சுவையூட்டிகளோ உணவில் சேர்க்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி விவசாயப் பணிப்பாளர் அ.செல்வராசா தலைமையில் நடைபெற்ற திறப்புவிழா நிகழ்ச்சியில் மாகாணசபை உறுப்பினர்கள் சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார் உட்பட மாகாண மற்றும் மத்திய திணைக்களங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் பொதுமக்களும்; கலந்துகொண்டிருந்தார்கள்.