ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள்: 6 மாத கால போரில் திருப்புமுனை

214 0

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய இத்தாக்குதல் 6 மாதங்களைக் கடந்தும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் வடமேற்கு உக்ரைனில் ரஷ்யப் படைகள் முக்கியப் பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது போரின் திருப்புமுனையாகவே கருதப்படுகிறது.

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக் கிழமை அங்கு உக்ரைன் படைகள் எதிர்பாராத அளவில் பலம் பொருந்திய தாக்குதலை நடத்தின. இந்நிலையில் ரஷ்ய வீரர்கள் அங்கிருந்து பின்வாங்கினர். அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்கள் அனைத்தையும் கைவிட்டு தப்பி ஓடினர்.

ரஷ்யப் படைகள் இசியம் பகுதியை தங்களின் தாக்குதலுக்கான லாஜிஸ்டிக் தளமாக பயன்படுத்தினர். இந்நிலையில் ரஷ்யப் படைகள் அங்கிருந்து வெளியேறியது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் ரஷ்யப் படைகள் வெளியேறியது குறித்து ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டச் செய்தியில், ரஷ்ய பாதுகாப்புப் படைகள் வலியுறுத்தியதன் பேரிலேயே இசியம் பகுதியில் இருந்து வெளியேறினர். அவர்கள் வேறு பகுதிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரிகள் இசியம் பகுதியை மீட்டதை உறுதிப்படுத்தாவிட்டாலும் கூட, ஜெலன்ஸ்கியின் முக்கிய அதிகாரிகளில் ஒருவரான அண்ட்ரை யெர்மாக், தனது ட்விட்டர் பக்கத்தில் இசியம் நகரின் புகைப்படங்களைப் பகிர்ந்து அத்துடன் திராட்சைப்பழ இமேஜைப் பகிர்ந்தார். இசியம் என்றால் உக்ரைனிய மொழியில் உலர் திராட்சை என்று அர்த்தம்.போரில் தீவிரமாக ஈடுபட்டுவந்த ரஷ்யப் படைகள் கீவ் நகரில் இருந்து முதலில் பின்வாங்கியது. தற்போது கார்கிவ் நகரின் இசியம் பகுதியில் இருந்து ஆயுதங்களைக் கூட கைவிட்டு பின்வாங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெறும் போரில் இது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.