ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. உறுப்பினரே இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல்

108 0

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு கலவரம் உண்டானது. இதனையடுத்து அலுவலகத்துக்கு வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதை எதிர்த்து இரு தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அ.தி.மு.க. அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்க உத்தரவிட்டது. இதனையடுத்து வருவாய்த்துறையினர் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைத்தனர்.

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை கடந்த மாதம் (ஆகஸ்டு) 18-ந்தேதி விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ஏற்று தமிழக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் எடப்பாடி பழனிசாமி சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்கீல் பாலாஜி சீனிவாசன் என்பவர் மூலமாக தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. அவர் திட்டமிட்டு வன்முறையை நிகழ்த்தி, அலுவலகத்துக்குள் புகுந்து ஆவணங்களை திருடி சென்றுள்ளார். எனவே அவரது மேல்முறையீட்டு மனுவை ஏற்றால் வன்முறையை ஊக்குவிப்பதாகி விடும். தனது பக்கம் பெரும்பான்மை இல்லை என தெரிந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் ஜனநாயகபூர்வமான தலைமை மாற்றத்துக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை விதித்தார்.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வம் மறைத்துள்ளார். வன்முறை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறவில்லை. அதன் பக்கத்தில் உள்ள பகுதியில்தான் நடைபெற்றது. எனவே அ.தி.மு.க. அலுவலகத்திற்கு ‘சீல்’ வைக்க முடியாது. அ.தி.மு.க. அலுவலக சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவு சரியே’ இவ்வாறு பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.