தென் மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், கொலைகளுடன் தொடர்புடைய அனைவரையும் அடையாளம் கண்டுவிட்டதாக தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.
குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும், 6 வாரங்களுக்குள் அனைத்து சம்பவங்களுடனும் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து காட்டுவதாகவும், பொலிஸாரா குற்றவாளிகளா என ஒரு கை பார்த்து விடலாம் எனவும் அவர் சவால் விடுத்தார்.156 ஆவது பொலிஸ் தின நிகழ்வுகளாக காலி – கோட்டையில் நடந்த விஷேட கொண்டாட்ட நிகழ்வின் போதே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘ கடந்த ஜூன் முதலாம் திகதி முதல் தென் மாகாணத்தில் இதுவரை துப்பாக்கிதாரிகளால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4 சம்பவங்கள் தொடர்பிலான பூரண விசாரணை நிறைவு செய்யப்பட்டு சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரீ 56 ரக துப்பாக்கிகள், பிரவுனின் ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏனைய சம்பவங்களின் சந்தேக நபர்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். அந்த, சந்தேக நபர்கள், அந்த கொலைக்காரர்கள், ஆயுதத்தை கையிலெடுத்தவர்கள் , குற்றத்தின் பின்னர் மறைந்திருக்க அல்லது சுதந்திரமாக இருக்க முடியும் என நினைப்பார்களாயின், அதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை என்பதை அவர்களுக்கு ஞாபகபப்டுத்த விரும்புகின்றேன்.
இரு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், 4 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களின் கீழ் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
எமக்கு வழங்கப்பட்டுள்ள சவாலை நாம் ஏற்கின்றோம். பார்க்கலாம் யார் சவாலில் ஜெயிக்கின்றார்ரகாள் என்று. நாமா அல்லது குற்றவாளிகளா என இன்னும் 6 வாரங்களில் விடை தெரிந்துவிடும்.
ஒரு போதும் ஆயுதங்களுடன் நடமாட நாம் அனுமதிக்கப் போவதில்லை. அனைவரையும் அடையாளம் கண்டுள்ளோம். உதவியவர்கள், மறைமுகமாக உதவியவர்கள், எஸ்.எம்.எஸ். அனுப்பியவர்கலில் இருந்து அனைவரையும் கண்டுபிடித்துவிட்டோம்.’ என தெரிவித்தார்.