இந்திய வல்லாதிகத்துக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி தனது இன்னுயிரை தமிழ் மக்களுக்காக அர்பணித்த தியாகச் செம்மல் தியாகி திலீபனின் முப்பத்தைந்தாவது ஆண்டு நினைவு தினம் நெருங்குகின்ற இவ்வேளையில் “அகிம்சை” என்பது ஆதிக்க அரசுகளால் எப்போதும் நசுக்கப்படுகின்றது என்பதே வரலாற்று உண்மை.
பௌத்த பேரின வாத அரசாங்கத்திடம் அகிம்சைப் போராட்டங்களோ உண்ணாவிரதம் போராட்டங்களோ வெற்றியடையாது என்பதனை அனுபவத்தின் ஊடாக 50 களிலேயே ஈழத்தமிழ் இனம் புரிந்து கொண்டது.
தர்ம சக்கரத்தை தனது தேசிய கொடியில் தாங்கிய இந்தியா அகிம்சை போராட்டத்தை கவனத்தில் கொள்ளும் என ஈழத் தமிழ் இனம் நம்பியது.
1986ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ்நாட்டிலிருந்த வேளை தொலைத் தொடர்புச் சாதனங்களை இந்தியா பறிமுதல் செய்தது. தொலைத் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசாங்கம் திரும்பத் தரும்வரைக்கும் ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் உடனே ஆரம்பித்தார்.
48 மணித்தியாலங்களுக்குள் இந்திய அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்களை தலைவர் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டுபோய் ஒப்படைத்தது. எனவே அகிம்சைப் போராட்டங்களை இந்தியா மதிக்கும் என ஈழத்தமிழ் மக்கள் நம்பினார்கள்.
இந்திய அரசிடம் ஜந்து அம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ஆம் நாள் தியாகி திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
மஹாத்மா காந்தியின் அகிம்சை வழி அடிப்படை அரசியல் கொள்கையை கொண்ட இந்தியா அலட்சியமாக நடந்தது. ஒரு சொட்டு நீரும் அருந்தாமல் 12 நாட்கள் தியாகி திலீபன் தன்னை வருத்தி தியாகச் சாவடைந்தார்.
காந்தியின் பெயரை தமது குடும்ப பெயராக மாற்றிக்கொண்டு காந்தீயம் பேசும் அரசியல் தலைவரின் கோர முகத்தை கண்டு ஈழ தமிழினம் மட்டுமல்ல உலகமே அதிச்சியடைந்தது.
“நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் , எனது இறுதி ஆசை இதுதான்”. என்ற பெரும் பணியை எம்மிடம் தந்து விட்டு தியாகச் சாவை அணைத்துகொண்டார் தியாகி திலீபன்.
“நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும்! மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்.” என்ற விடயத்தை எமக்கு தெளிவாக கூறிசென்றார் தியாகி திலீபன்.
‘கோட்டா கோகம’ அகிம்சை வழி போராட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு இராணுவ கரங்களை பயன்படுத்தி அடக்கியது என்பதை தற்போது கண்ணூடாக கண்டோம்.
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக அரசு அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டது. மக்களின் அரசியல் உரிமைகள் கருத்து வெளியிடும் உரிமைகள் பறிக்கப்பட்டது. புத்தன் வழி என தம்மை பறை சாற்றும் சிங்கள அரசாங்கம் தனது இன மக்களின் அகிம்சை போராட்டத்தை அதிகார கரங்களால் அடக்கியது.
தமிழ் மக்களுக்காக உருவாக்கபட்ட பயங்கரவாத தடை சட்டத்தை ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் கைது செய்யப்பட்ட சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் மீது பயன்படுத்தியது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! என அறைகூவி தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் திலீபனின் வாழ்க்கை அடக்குமுறைக்கு உள்ளான ஒவ்வொரு இன மக்களுக்கு ஓர் உத்வேகம்.