சர்வதேச தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நடை பவணியொன்று கிண்ணியா தளவைத்தியசாலையின் முன்னால் இருந்து இன்று (10) காலை 9.00 மணிக்கு ஆரம்பமானது.
“உதவ நாம் தயார்” எனும் தொனிப் பொருளின் கீழ் இடம் பெற்ற குறித்த நடைபவணியானது கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவு மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்,கிண்ணியா பிரதேச செயலகம் இணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நடைபவணியானது பதாகைகளை ஏந்தியவாறு கிண்ணியா பிரதான வீதியூடாக சென்றடைந்து புஹாரி சந்தியூடாக மீண்டும் வைத்தியசாலையை வந்தடைந்தனர்.
மனம் திறந்து பேசுவோம் மனநலம் பேணுவோம், 1926 அவசர இலக்கத்திற்கு அழைத்து உயிரை பாதுகாப்போம், உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், உளநோய் தொடர்பான தப்பெண்ணமே அந்நோயை குணப்படுத்த தடையாகின்றது போன்ற பல வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
தற்கொலையை இவ்வாறான விழிப்புணர்வு மூலமாக தடுக்கவும் அதனை குறைக்கவும் முடியும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது எனவும் வருடமொன்றுக்கு 8 இலட்சம் நபர்கள் தற்கொலை மூலமான உயிரிழப்புக்கள் சர்வதேசம் முழுவதும் ஏற்படுவதாக கிண்ணியா தளவைத்தியசாலையின் உளநலப் பிரிவு வைத்தியர் டொக்டர் ஏ.கே.எம்.நஸ்மி இதன் போது தெரிவித்தார்.
இதில் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உளநலப் பிரிவு பொறுப்பதிகாரி டொக்டர் கௌரீஸ்வரன்,கிண்ணியா தளவைத்தியசாலை உளநலப் பிரிவு வைத்தியர் ஏ.கே.எம்.நஸ்மி, கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி, கிண்ணியா வலயக் கல்வி அலுவலக உளநல ஆலோசகர் ஏ.எம்.ஹிதாயத்துள்ளா,வைத்தியசாலை ஊழியர்கள்,தாதியர்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.