இராஜாங்க அமைச்சுகளுக்கென பிரத்தியேகமாக செயலாளர்களை நியமிக்காதிருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
இராஜாங்க அமைச்சர்களுக்கு தனியாக நிதி ஒதுக்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுவதன் காரணமாக, இராஜாங்க அமைச்சர்களின் விவகாரங்களை ஒருங்கிணைக்க அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஒருவரை நியமிக்கப்பட வேண்டும்.
இராஜாங்க அமைச்சிற்கான தேவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் புதிய பதவிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கக்கூடாது.
இராஜாங்க அமைச்சர்களின் அதிகாரிகளுக்கு அமைச்சரவை அமைச்சிலேயே கட்டட வசதிகள் வழங்கப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அதிகபட்சமாக 11 ஊழியர்களை மாத்திரமே நியமிக்க முடியும்.
அத்துடன், இராஜாங்க அமைச்சர்களின் பணிக்கு அதிகபட்சமாக 3 உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட வேண்டும். இராஜாங்க அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாதாந்தம் 500 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.