முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கட்சியே முடிவு எடுக்கும் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வவுனியா, மருக்காரம்பளைப் பகுதியில் இன்று (11) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் உணவு உற்பத்தியில் நெருக்கடி ஏற்படும். எனவே உணவு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கேற்ற திட்டங்களை தயாரித்து அதனை எமது அமைச்சின் ஊடாக உயர்த்த வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிக்க செய்ய முடியும். இதற்கான வேலைத்திட்டங்களை எமது அமைச்சு முன்னெடுக்கவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதன் உதவிகள் கட்டம் கட்டமாக கிடைக்க இருக்கின்றது. இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் ஒரு அறிக்கையை விட்டுள்ளார்கள். அவசரமாக உதவி செய்து இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுமாறு கேட்டுள்ளார்கள். அதனடிப்படையில் நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றதும், அவர்களது உதவி கிடைத்திருப்பதும் எமது பொருளாதாரத்தை மேம்படுத்த கிடைத்துள்ள ஒரு சந்தப்பமாகவே அமைந்துள்ளது எனத் தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்து ஏதாவது பதவிகளைப் பெறுவரா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பில் கட்சி எடுக்கின்ற முடிவைப் பொறுத்தே செயற்பாடுகள் அமையும். தற்போதைய நிலையில் முன்னாள் ஜனாதிபதி தன்னால் முடிந்த முயற்சிகளையும் நாட்டுக்காக செய்வேன் எனத் தெவித்துள்ளார். அதனால் கட்சி தான் அது தொடர்பில் முடிவு எடுக்கும் எனத் தெரிவித்தார்.