புதிய தீர்மானத்துக்கான திறவுகோல்

184 0

“ஐ.நா.உயர்ஸ்தானிகர் அறிக்கையில்  வழக்கமான பொறுப்புக்கூறல் வலியுறுத்தல்களுக்கு அப்பால், நாட்டை  பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றதற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்கவும் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.”

“இலங்கை உடனடியாக இராணுவ மயமாக்கல் நோக்கிய போக்கில் இருந்து விலக  வேண்டும்  என்று அறிக்கை வலியுறுத்தினாலும் இலங்கையின் படைகளைப் பலப்படுத்துவதற்காக அனுசரணை நாடுகள் கூட தொடரந்து உதவிகளை வழங்கி வருகின்றன”

நாளை ஜெனிவாவில் தொடங்கவிருக்கும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை ஒரு வாரம் முன்னதாகவே வெளியாகியிருக்கிறது.

 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்துக்கு இணங்க, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளின் முன்னேற்றங்கள் குறித்த- இந்த விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கையில், வழக்கமான பொறுப்புக்கூறல் வலியுறுத்தல்களுக்கு அப்பால், நாட்டை முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றதற்கு காரணமானவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்கவும் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் உறுப்பு நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப்பட்டிருக்கிறது.

 

 

 

 

 

 

அத்துடன், இலங்கை உடனடியாக இராணுவ மயமாக்கல் நோக்கிய போக்கில் இருந்து விலக  வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

போருக்குப் பின்னரான காலகட்டத்தில் இலங்கை தீவிரமான இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகி வந்தது.

அளவுக்கு அதிகமாக திரட்டப்பட்ட இராணுவ ஆளணிக்கு அளிக்கப்பட்டு வந்த முன்னுரிமைகளும், இராணுவப் பின்னணி கொண்டவர்களுக்கு அதிகாரத்தில் அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவமும், இந்த இராணுவ மயமாக்கல் போக்கின் உச்சக்கட்டமாக விளங்கியது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், சேவையில் இருந்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 28 பேர் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர் என்பதை ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலுக்குப் பின்னர், அவர்களில் பலரது பதவிகள் இல்லாமல் போயிருப்பினும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய, ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்புச் செயலாளராகவும், ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாகவும், புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் வடக்கு, கிழக்கில் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும், இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை விடுவிக்க வேண்டும் என்பன போன்ற விடயங்களையும் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது ஐ.நா.

ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன், படையினர் மற்றும் பொலிசாருக்கு வழங்கிய விரிவான அதிகாரங்களையும் இந்த அறிக்கை குறை கூறியிருக்கிறது.

வரவு,செலவுத் திட்டத்தில் 15 வீதம் பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, இராணுவ மயப்போக்கில் இருந்து இலங்கை விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம். தொடர்ச்சியாக தனது, அறிக்கைகளில் இராணுவமய நீக்கத்தை வலியுறுத்தினாலும், இராணுவக் கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரினாலும், இதுவரையில் அரசாங்கம் அதற்கான நகர்வுகளை முன்னெடுக்கவில்லை.

தொடர்ந்து இராணுவத்தைப் பலப்படுத்துவதிலும், அதற்காக வளங்களை கொட்டுவதிலுமே அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.

இராணுவத்தின் வசமுள்ள தனியார் நிலங்களை விடுவிக்குமாறு கோரப்படுகின்ற நிலையில் புதிய காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை படையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதனையும் ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டத் தவறவில்லை.

இராணுவமய போக்கில் இருந்து இலங்கை விடுபட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் கூறியிருப்பினும், அனுசரணை நாடுகள் கூட அதற்கு சரியாக அழுத்தம் கொடுக்கவில்லை என்பதே உண்மை.

அமெரிக்க கடலோரக் காவல்படையில் இருந்து நீக்கப்பட்ட டக்ளஸ் முன்ரோ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் அண்மையில் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, அது சியாட்டில் துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டிருக்கிறது.

குவாம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் வழியாக அந்தக் கப்பல், நவம்பர் மாதம் இலங்கையை வந்தடையவுள்ளது.

இதனைக் கொண்டு வருவதற்காக சென்ற 180கடற்படை மாலுமிகளில் 9 பேர் அமெரிக்காவில் தப்பியோடி விட்ட நிலையில், எஞ்சியோருடன் இந்தக் கப்பல் வந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்று இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு எரிபொருள் நெருக்கடி ஏற்பட்ட போது, அவுஸ் திரேலியா நிதி செலுத்த, இந்தியா எரிபொருளை விநியோகித்தது.

இலங்கையின் படைகளைப் பலப்படுத்துவதற்காக அனுசரணை நாடுகள் கூட தொடரந்து உதவிகளை வழங்கி வருகின்றன. இது பூகோள அரசியல் போட்டிகளின் விளைவுகளில் ஒன்று.

இவ்வாறான நிலையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தும் பாதுகாப்புக் செலவினக் குறைப்பு, பாதுகாப்பு மறுசீரமைப்புத் திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், தேசிய அதிகார வரம்புகளில் நீதித்துறை நடவடிக்கைகளின் மூலம்,இலங்கையில் அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களை விசாரணை செய்து குற்றவாளிகளை தண்டிக்க ஒத்துழைக்குமாறு, உறுப்பு நாடுகளிடம் கோரப்பட்டிருக்கிறது.

இதற்காக, தொடர்புடைய சர்வதேச வலையமைப்புகள் அல்லது உலகளாவிய அதிகார வரம்பின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை பயன்படுத்துமாறும் ஐ.நா பணியகம் முன்மொழிந்துள்ளது.

குற்றவாளிகளைத் தண்டிப்பதில் உள்நாட்டுப் பொறிமுறைகளின் தோல்வி, தண்டனை விலக்கு கலாசாரம் என்பன, உலகளாவிய நீதித்துறை வரம்பை பயன்படுத்தும்படி உறுப்பு நாடுகளைக் கோருகின்ற நிர்பந்தத்தை வழங்கியிருக்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஏற்கனவே முன்னைய அறிக்கைகளிலும் இந்த அழைப்பை விடுத்திருந்தார். தற்போதைய அறிக்கையிலும் அதனை முன்வைத்திருக்கிறார்.

அத்துடன், சர்வதேச மனித உரிமை மீறல்கள் அல்லது கடுமையான மனிதாபிமான சட்ட மீறல்களைச் செய்ததாக நம்பத்தகுந்த வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் போன்ற இலக்கு விதிக்கப்பட்ட தடைகளை ஆராயுமாறும், உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ள படை அதிகாரிகள் அல்லது நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா மட்டும் தான் எடுத்திருக்கிறது.

ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.

அதேவேளை, சரத் பொன்சேகா, கமல் குணரத்ன, சுசந்த ரணசிங்க உள்ளிட்ட பல படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருக்கிறது.

ஆனால் அவர்களுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளையோ பயணத் தடைகளையோ விதிப்பதாக பகிரங்க அறிவிப்பை வெளியிடவில்லை.

அதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனிநபர்களுக்கு எதிராக அன்றி, போர் முனையில் இருந்த ஒட்டுமொத்த படைப்பிரிவுகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இது நியாயமற்ற நடவடிக்கை என்றும் அண்மையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார்.

இறுதிப் போரில் பங்கேற்ற பல முக்கியமான டிவிசன்களில் பணியாற்றிய அதிகாரிகள் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி மறுக்கப்படுகின்றது. ஆனால் அது விரிவானதொரு ஒழுங்குமுறைக்குள் இடம்பெறவில்லை.

இவ்வாறான நிலையில் இராணுவ மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கோ, குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பொறிமுறையை உருவாக்குவதற்கோ இலங்கை ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப் போவதில்லை.

அதேவேளை,ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை ஏற்கனவே முன்வைத்த பல விடயங்களையே மீண்டும் வலியுறுத்துவதாக உள்ளது.

மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் ஏற்கனவே முன்னெடுத்துக் கொண்டிருக்கும், மீறல்கள் குறித்த சாட்சியங்களை சேகரித்துப் பகுப்பாய்வு செய்து பாதுகாக்கும் திட்டக் குழுவின் செற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும்,மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் கண்காணிப்பை தொடர்வதற்கும் பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறது.

இது தான், இந்தக் கூட்டத்தொடரில் அனுசரணை நாடுகள் புதியதொரு தீர்மானத்தை முன்வைப்பதற்கான திறவுகோலாக இருக்கப் போகிறது.

-சுபத்ரா