ரணில் அரசின் ஜெனிவா பொறி ஜெனிவா விவகாரத்தில் ரணில் எடுக்கும் முன்னுக்குப்பின் முரணான முடிவு இரட்டை முகம் கொண்டது. பிரதமராக இருக்கும்போது வழங்கிய இணைஅனுசரணையை இன்று அவர் மறுதலிக்கும் பின்னணி என்ன? ஜெனிவா கடுமையான தீர்மானத்தை நிறைவேற்றி நடவடிக்கை எடுக்குமானால் அது யாரைத் தண்டிக்கும் என்பது தெரியாதவரல்ல ரணில். தமது பதவியைத் தக்க வைக்க சரியான உத்தியை அவர் பயன்படுத்துகிறாரா?
செப்டம்பர் மாதம் என்பது இலங்கையைப் பொறுத்தளவில் இப்போது ஜெனிவா காலமென்தாகி விட்டது. இலங்கை மீதான தீர்மானங்கள் வருவதும் விவாதங்கள் இடம்பெறுவதும் காலநீடிப்பு பெறுவதும் தொடர்கதையாகி விட்டது.
முள்ளிவாய்க்கால் மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்ட இலங்கை அரசின் மீதான 46ம் இலக்க தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்துவிட்டது. இந்த மாதம் 12ம் திகதி முதல் அக்டோபர் 7ம் திகதி வரையான அமர்வில் 51வது தீர்மானத்தை நிறைவேற்ற பிரித்தானிய தலைமையிலான ஏழு அனுசரணை நாடுகளும் முன்வந்துள்ளன.
இதற்கு முன்னோடியாக, மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அறிக்கை இலங்கையின் சட்டத்துக்குப் புறம்பான செயற்பாடுகளை விலாவாரியாக விபரித்து வெளிவந்துள்ளது. இந்த விடயத்துக்குள் செல்வதற்கு முன்னர் இலங்கையைப் பொறுத்தளவில் செப்டம்பர் மாதத்தின் முக்கியத்துவத்தைப் பார்க்க வேண்டும்.
முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன செப்டம்பர் 17ல் பிறந்தவர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க இதே மாதத்தில் 26ம் திகதி அகால மரணத்தைத் தழுவியவர். 1946ம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் திகதியில் ஐக்கிய தேசிய கட்சி உருவாக்கப்பட்டது.
இதன் 76வது வருட கொண்டாட்டம் பெருநிகழ்வாக கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. கட்சி உருவாகும்போது மூன்று வயதுச் சிறுவனாக இருந்த ரணில் விக்கிரமசிங்க இப்போது கட்சித் தலைவர் என்பதோடு ஜனாதிபதி பதவியும் வகிப்பதால் இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ரணில் தமது தலைமை உரையில் நாடு சந்தித்துள்ள அத்தனை விடயங்களையும் சுட்டிக்காட்டினார். ஆனால் ஏனோ தெரியாது ஜெனிவாவைப் பற்றி எதுவுமே கூறாது சாதுரியமாக நழுவி விட்டார்.
அதேசமயம் தம்மை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதிகளுள் நான்காவதாகத் தெரிவானவர் என்று பெருமையோடு குறிப்பிட்டார். ஆவண நோக்கம் கருதி இதுபற்றிச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும். 1977ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையில் வென்றதையடுத்து அதன் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன முதன்முறையாக தமது 71வது வயதில் பிரதமரானார். அடுத்த சில மாதங்களில் புதிய அரசியலமைப்பை உருவாக்கி, தேர்தலின்றி முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக 1978 பெப்ரவரியில் பதவியேற்றார். பின்னர் 1982ல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலேயே மக்களால் தெரிவான ஜனாதிபதியானார்.
1988ல் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற ஆர்.பிரேமதாச ஜனாதிபதியானார். ஆனால் 1993 மே தினத்தன்று அகால மரணமானதையடுத்து, அவ்வேளை பிரதமராகவிருந்த டி.பி.விஜேதுங்க அரசியலமைப்பு சட்டத்துக்கமைய ஜனாதிபதியானார். இந்த வருடம் கோதபாய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பின் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானார். இந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் நான்கு ஜனாதிபதிகளில் இருவர் மட்டுமே நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
அரசியல்வாதிகளிடம் பொதுவான பண்பு ஒன்று உண்டு. தேவையை ஒட்டி வசதி கருதி மறந்துவிடுவது. ரணிலும் அதே பாணியில்தான் பல விடயங்களை இப்பொழுது கையாள ஆரம்பித்திருக்கிறார். இந்த மாதம் சர்வதேச ஞாபகமறதி மாதமாகும். இதனால்தானோ என்னவோ ரணிலுக்கும் ஞாபகமறதி (டிமென்சியா) ஆரம்பித்திருக்கிறது போலும். இல்லையென்றால் ஜெனிவா விடயத்தில் முன்னுக்குப்பின் முரணாக அவர் செயற்பட வேண்டிய தேவையில்லை.
சில நாட்களுக்கு முன்னர் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பாக விடுத்த அறிக்கை இலங்கை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் மறுப்புகளை சுட்டிக்காட்டுவதோடு, தாமதமின்றி செயற்படுத்த வேண்டியவைகளையும் சுட்டியுள்ளது. இலங்கை தனது அரசியல் வாழ்வில் முக்கியமான கட்டத்தில் இருப்பதாகவும், இதனால் இங்கு வாழும் சமூகங்கள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளும் பாதிக்கப்படுவதாக குறிப்பிடும் இந்த அறிக்கை இது விடயத்தில் நிலையான முன்னேற்றங்களுக்கு வலியுறுத்துகிறது.
இராணுவ மயமாக்கல் நோக்கிய நகர்வை இலங்கை அரசு தொடர்ந்தும் மேற்கொள்வதை இந்த அறிக்கை இறுக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் அதியுயர் மட்டங்களில் போர்க் குற்றங்களில் நம்பத்தகுந்த முறையில் சில ராணுவ அதிகாரிகளுக்கு தீவிரமாக ஊக்குவிப்பு வழங்கப்பட்டுள்ளதையும், தேசிய மட்டத்தில் பொறுப்புக் கூறலுக்கான முன்னேற்றம் எதுவுமே இல்லாது காணப்படும் நிலையையும் ஆணையாளர் தமது அறிக்கையில் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.
கடந்த காலங்களிலும் ஜெனிவா அமர்வுகளில் இவ்வாறான தீர்மானங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒவ்வொரு தடவையும் சாக்குப்போக்கு சொல்லியும், காலத்தை இழுத்தடித்தும் வந்த இலங்கை அரச தரப்பு இறுதியில் இலங்கையின் இறையாண்மை, அரசியலமைப்பு போன்றவைகளை வலிந்திழுத்து அதற்கு மாறாக எதனையும் செய்ய முடியாதென்பதை செயல் வடிவில் காட்டி வந்துள்ளது.
இதனால் தற்போதைய ஆணையாளரின் அறிக்கை நம்பகமான உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவ வேண்டுமென்பதையும், நிலைமாறு கால மற்றும் பொறுப்புக் கூறல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட மூலோபாயத்தை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளது.
46:1 இலக்கத் தீர்மானத்தின் கீழ் இலங்கையின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு கடந்த அமர்வின்போது மனித உரிமைகள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்திருந்தது நினைவிருக்கலாம். இப்போது அதற்கு மேல் ஒருபடி சென்று இலங்கையின் போர்க்குற்றம் மீதான சர்வதேச விசாரணைக்கு உலக நாடுகள் ஆதரவு வழங்குமாறு கோரியுள்ளார்.
46:1 தீர்மானம் செயற்படாது முடிவுக்கு வந்து 51வது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்து இன்றைய நிலைமையில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
46:1 தீர்மானத்தை கோதபாய அரசு முழுமையாக நிராகரித்தது போன்று, இப்போது ரணில் அரசும் அதே வழியில் நிராகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் அலி சப்றி வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் இவரும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் நேரடியாக இலங்கை அரசின் பிரதிநிதிகளாக ஜெனிவா அமர்வில் பிரசன்னமாகின்றனர்.
46:1 இலக்கத் தீர்மானம் மைத்திரி-ரணில் இணைந்த நல்லாட்சிக் காலத்தில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது மைத்திரி-ரணில் அரசு இதனை முழுமையாக ஏற்று இணைஅனுசரணை வழங்கியிருந்தது. சர்வதேச கலப்பு நீதிப் பொறிமுறை, பொறுப்புக் கூறல் போன்ற முக்கிய அம்சங்கள் இத்தீர்மானத்துள் அடங்குவன. இணைஅனுசரணை வழங்கிய போதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்களிப்போடு ஜெனிவாவில் கால நீடிப்பை பெற்று வந்த நல்லாட்சி அரசு கலைந்ததோடு அதனை கவனத்தில் கொள்ள எவரும் முன்வரவில்லை.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பொழுது இணைஅனுசரணை வழங்கிய அரசில் பிரதமராகவிருந்த ரணில், இன்று இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்கிறார். ஆனால், அன்று ஏற்றுக் கொண்டவைகளை இன்று நிராகரிக்கிறார். இதனால் அவரின் இரட்டை முகம் அல்லது இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டதென்ற குரல்கள் தமிழர் தரப்பிலிருந்து ஓங்கி ஒலிக்கின்றன.
ஜெனிவா தீர்மானத்தை ரணில் ஆதரிக்கிறார் என்றும், இலங்கை ராணுவத்தை காட்டிக் கொடுத்து விடுவார் என்றும் எதிர்பார்த்த சிங்கள தரப்புக் குரல்கள், ரணிலின் குத்துக்கரணத்தால் நசுக்கப்பட்டு விட்டது.
அவரின் இந்த முன்னுக்குப்பின் முரணான போக்கு புதிதானதல்ல. ஜே.ஆரின் வாரிசு என்பதால் இவ்வாறான குள்ளநரிப் போக்கு அவருக்கு இருக்குமென்பதில் ஐயமில்லை. இந்தப் பின்னணியில் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ரணில் அரசு எதிர்க்கிறது என்றால் – அதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும். இதனை எதிர்ப்பதன் வாயிலாக பொதுஜன பெரமுனவின் ஆதரவை தக்க வைக்கலாமென அவர் நினைக்கக்கூடும். அதே சமயம் தமது எதிர்ப்பாளர்களின் வாயை மூடவும் அவர் இதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தலாம். எனினும், முன்னரிலும் பார்க்க கடுமையான வாசகங்களுடன் ஒரு தீர்மானம் புதிதாக நிறைவேற்றப்படுவதை அவரால் நிறுத்த முடியாது.
இலங்கையை நெருக்கடிக்குள் தள்ளக்கூடியதென எதிர்பார்க்கப்படும் ஒரு தீர்மானம் ஜெனிவா அமர்வில் நிறைவேற்றப்படுமானால் அது யாரைக் குறி வைப்பதாக இருக்கும்? நிச்சயமாக ரணிலை அல்ல. போரை முடிவுக்குக் கொண்டு வந்ததாகக் கூறி கொண்டாடியவர்களையும், மனித உரிமைகளை மீறி படுகொலைகளை மேற்கொண்டவர்களையுமே அது குறி வைக்கும். நிச்சயமாக ராஜபக்சக்களையும், அவர்களோடு இணைந்து போர்க்குற்றம் புரிந்த ராணுவ அதிகாரிகளையும்தான் போர்க்குற்ற விசாரணைக்குள் தள்ளும். நாற்பத்தை வருட அரசியல் அனுபவசாலியான ரணிலுக்கு இது புரியாததல்ல.
இவர் நினைப்பதுபோல் ஜெனிவா செயற்பாடுகள் தொடருமானால் ஜனாதிபதி பதவியை தொடர்ந்து வகிக்கவும், தமது ஐக்கிய தேசிய கட்சியை கட்டி எழுப்பவும் இது உதவுமென ரணில் நம்புவதுபோலத் தெரிகிறது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன ராஜிவ் காந்தியுடன் இலங்கை-இந்திய ஒப்பந்தம் செய்தது விடுதலைப் புலிகளோடு இந்தியாவை போரிட வைத்து, தம்மால் முடியாது போன காரியத்தை இந்தியா ஊடாக செயற்படுத்தவே என்பது காலஞ்சென்ற பின்னர் தெரியவந்த உண்மை. அந்தப் பாதையையே ரணிலும் ஜெனிவாவில் பயன்படுத்துகிறார் போலும்.
ஜெனிவாவை மையப்படுத்தி ரணில் வைக்கும் இலக்கு யாருக்கான பொறி என்பதைக் கண்டறிய மனித உரிமைகள் பேரவை தனது பயணத்தைத் தொடர வேண்டும்.
பனங்காட்டான்