சிறிலங்காவுடன் இராணுவ உறவுக்கு அமெரிக்கா நிபந்தனை

393 0

சிறிலங்காவுடன் முழு அளவிலான இராணுவ உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, அமெரிக்கா தரப்பில் சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், மனித உரிமைகள் நிலையைக் காரணம் காட்டி, அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான இராணுவ உறவுகள் மட்டுப்படுத்தப்பட்டன.

tom-karunasena-2-450x300சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மீண்டும் சிறிலங்காவுடன் இராணுவ உறவுகளை மீளவும் வலுப்படுத்திக் கொள்ள அமெரிக்கா விருப்பம் கொண்டுள்ள அதேவேளை, சிறிலங்காவும், இந்த விடயத்தில் ஆர்வம்காட்டி வருகிறது.

இந்தநிலையில்,  சிறிலங்காவுடன் மீண்டும் இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா சில நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் இராணுவ மறுசீரமைப்புத் திட்டங்களை முன்வைத்தே அமெரிக்கா இந்த நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி இதுகுறித்து சிறிலங்காவின் பாதுகாப்பு உயர்மட்டத்துடன் பேச்சு நடத்தியிருந்தார்.

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், கடற்படை, விமானப்படை, இராணுவத் தளபதிகள் பங்கேற்ற கூட்டத்தில், ரொம் மாலினோவ்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரம் பற்றிப் பேச்சு நடத்தினர். இதுகுறித்து நேற்றுமுன்தினம் இரவு செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட ரொம் மாலினோவ்ஸ்கி,

“சிறிலங்கா பாதுகாப்புத் தரப்புடன் மிக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.  அமெரிக்காவுடன் முழு அளவிலான இராணுவம்- இராணுவம் இடையிலான உறவுகளை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்கு, சிறிலங்கா முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக  நாம் நேர்மையான கலந்துரையாடல் ஒன்றை நடத்தினோம்.

அந்தப் பேச்சுக்களில் பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கு ஆயுதப் படைகள் ஆதரவளிக்க வேண்டிய தேவையும் உள்ளடக்கப்பட்டிருந்தது. சிறிலங்கா இராணுவத்தில் உள்ள பலருக்கு இதனை ஏற்றுக்கொள்வது நெருக்கடியான செயல்முறையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.