பிரான்ஸ் நாட்டின் சுற்றுலா மையங்களில் ஒன்றான நீஸ் நகரில் உள்ள புரேமனேட்டெஸ் ஏஞ்சலிஸ் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ‘பாஸ்டில் தினக் கொண்டாட்டம்‘ வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.அப்போது யாரும் எதிர்பாராத விதமாக 25 டன் எடை கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர் கொலை வெறியுடன் 150 கி.மீ. வேகத்தில் ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தினான். இதில் 84 பேர் கொல்லப்பட்டனர். லாரியை ஓட்டிவந்தவரை உடனே போலீசார் சுட்டுக்கொன்றனர்.
பிரான்ஸ் நாட்டையை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தில், குற்றவாளிக்கு இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்திருக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் மேனுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்த போது அவர் கூறியதாவது:-
அவர் ஒரு தீவிரவாதி, அடிப்படை இஸ்லாமியவாதிகளுடன் ஏதேனும் ஒருவகையில் தொடர்பு இருந்திருக்கலாம். இது ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவம். எந்த தீவிரவாத அமைப்புடன் குற்றவாளிக்கு தொடர்பு இருந்திருக்கும் என்று கண்டுபிடிக்க வேண்டும்.தீவிரவாதத்திற்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.