இலங்கைக்கு 48 மாதகாலத்துக்கு 290 கோடி அமெரிக்க டொலர்கள் கடனுதவியை வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் காணப்பட்ட உடன்பாடு குறித்து பாரிஸ் கழகம் (Paris Club) அதன் திருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்மதி நிலுவை (Balance of Payments) அல்லது பண தொடர் இயக்கப்(Cash flow) பிரச்சினைகளை கொண்ட நாடுகளுக்கு உதவுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (Extended Fubd Facility) கீழ் இந்த கடனுதவி வழங்கப்படும்.
குறைவான அபிவிருத்தி கொண்ட நாடுகளுக்கு கடன்களை வழங்கியிருக்கின்ற தனவந்த நாடுகளின் முறைசாரா குழுவே பாரிஸ் கழகம் என்று அழைக்கப்படுகிறது. கடன்களை மீளச்செலுத்துவதில் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற நாடுகளுக்கான தீர்வுகளை காண்பதில் பாரிஸ் கழகம் நாட்டம் காட்டுகிறது. கடன்பட்ட நாடுகள் அவற்றின் கடப்பாடுகளை மதித்து நடப்பதை உறுதிசெய்வதற்கு இந்த பாரிஸ் கழகத்தின் நாடுகள் எந்தளவு கால அவகாசத்தை,எத்தகைய ஆலோசனையை,எந்தளவு கூடுதல் கடன்களை கொடுக்கின்றன என்பதைப் பொறுத்து அவற்றின் புரிந்துணர்வுடனான தன்னலத்தை தெரிந்து கொள்ளமுடியும்.
அதே போன்றே இலங்கையும் அதன் கடன்களை மீளச்செலுத்துவதை உறுதிசெய்வதில் பாரிஸ் கழகம் நாட்டம் காட்டுகின்ற நிலையில்,மக்களை வறுமைப்படுத்தாமல் புதிய கடன்களை தன்னால் மீளச்செலுத்தமுடியும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டியது முக்கியமானதாகும்.கடந்த 6 மாதங்களில் பெரும்பான்மையான இலங்கையர்களின் வாழ்க்கைத்தரங்கள் மிகவும் மோசமாக வீழ்ச்சி கண்டுவந்திருக்கிறது.
தற்போது பாணின் விலை 300 ரூபாவாக அதிகரித்திருக்கிறது.இது 6 மாதங்களுக்கு முன்னர் நாட்டில் பொருளாதார நெருக்கடி தோன்றுவதற்கு முன்னதாக இருந்த விலையை விடவும் 500 சதவீத அதிகரிப்பாகும். அதே போன்றே மீனவர்கள், விவசாயிகள் அல்லது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்று வறியவர்களின் எரிபொருளாக இருக்கின்ற மண்ணெண்ணெயின் விலையும் சுமார் 400 சதவீதத்தினால் அதிகரித்திருக்கிறது.
ராஜபக்ச அரசாங்க காலத்தில் மக்களின் வாழ்க்கைத் தரங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே அரசாங்கத்தின் மீது வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியது.இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியடைந்து அதன் விளைவாக பணவீக்கம் கடுமையாக அதிகரித்ததால் மக்களின் சேமிப்புகள் அரைவாசிக்கும் கூடுதலாக குறைந்துவிட்டன.
இன,மத மற்றும் சமூக வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் சகலரும் தங்களது அடிப்படை தேவைகளைப் பெறமுடியாமல் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியதன் காரணத்தினால்தான் போராட்ட இயக்கத்துக்கு பேராதரவு கிடைத்தது.அரசாங்கம் அதன் கவனத்தைக் குவிக்கவேண்டிய பிரதான பிரச்சினை இதுவேயாகும்.துரதிர்ஷ்டவசமாக, மக்களின் வாழ்க்கைத்தரங்கள் மற்றும் சேமிப்புகளின் வீழ்ச்சியைத்்தணிப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுப்பதாக தெரியவில்லை.
தவறான விளக்கம்
கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும் அணுகுமுறையை கடைப்பிடிக்காத அரசாங்கத்தின் போக்கு சிறியரக தொழில்துறையின் கடுமையான கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது.பொருத்தமான குறியீடுகளின் கீழ் பட்டியலிடப்பட்ட உப உள்ளீடுகளைப் பற்றி கருத்தல் எடுக்காமல் 300 பொருட்களின் இறக்குமதி மீது தற்காலிக தடை விதிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று இலங்கை ஐக்கிய தேசிய தொழிற்துறை கூட்டமைப்பின் ( srilanka United National Businesses Alliance) தலைவி தான்யா அபேசுந்தர கூறியிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதியாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களே அமைகின்றன.இவை சகல தொழிற்துறைகளினதும் 80 சதவீதமானவையாக இருக்கின்றன.இவை ஆரம்பநிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை என்று பொருளாதாரத்தின் சகல துறைகளிலும் காணப்படுவதுடன் தேர்ச்சிபெற்ற, ஒரளவு தேர்ச்சிபெற்ற மற்றும் தேர்ச்சியற்ற ஆட்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குகின்றன.சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகள் தொழில்வாய்ப்புகளுக்கு இன்றியமையாத மூலங்களாக இருப்பதுடன் தொழில்வாய்ப்புகளின் 35 சதவீதத்துக்கு பங்களிப்புச் செய்கின்றன.
” எமது செயற்பாடுகளை தொடர இயலாத ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.300 பாவனைப் பொருட்களின் இறக்குமதியை தடைசெய்யும் தீர்மானத்தை எடுத்தவர்கள் உள்நாட்டு உற்பத்திகளைப் பற்றி விளங்கிக்கொள்ளவில்லை.தொழிலாளர்களின் சம்பளங்களை வழங்க இயலாத நிலை ஏற்படப்போவதால் 4,500 சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 45 இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவிற்கு வரப்போகிறார்கள்.அரசாங்க சேவையில் உள்ளவர்களுக்கு சம்பளங்களை வழங்கவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செலவுகளுக்காகவும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணத்தை அச்சிடுவதற்கு அரசாங்கம் திட்டமிடுகிறது.ஆனால் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகளை பாதுகாப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ” என்று தான்யா கூறினார்.
மக்களின் வாழ்க்கையும் தொழிற்துறைகளும் வழமைபோன்று நடைபெறுவது என்ற நினைப்பில் அரசாங்கம் நடந்துகொள்கிறது.இது துரதிர்ஷ்டவசமானது.போராட்ட இயக்கம் ஒன்று ஒருபோதும் முன்னெடுக்கப்படவில்லை என்பது போன்று தோன்றுகிறது. போராட்ட இயக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மீள்வருகை போராட்டம் ததணிந்துவிட்டது அல்லது ஒடுக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில் அரசாங்கம் இருக்கிறது என்பதன் அறிகுறியாகும்.இதனால் ஆளும் கட்சியில் உள்ள சிலர் முன்னாள் ஜனாதிபதியை புதிய பிரதமராக நியமிக்கவேண்டும் என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் லிக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் உள்ள 134 ஆளும் கட்சியின் உறுப்பினர்களினால் வழிநடத்தப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடும் நிலை தோன்றியிருக்கிறது.
30 அமைச்சர்களுடன் 40 பிரதியமைச்சர்களையும் நியமித்து அவர்களுக்கும் அவர்களது பரிவாரங்களுக்கும் தனிப்பட்ட மற்றும் கோர்ப்பரேட் நண்பர்களுக்கும் சலுகைகளைச் செய்வதற்கு பெருமளவு நிதியை அநாவசியமாக ஒதுக்குவதற்கு அரசாங்கத்துக்கு ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிதியுதவி.இதுவே இன்றைய அரசியல் யதார்த்தம்.இராணுவத்துக்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் போக்கும் தொடருகிறது.அதன் விளைவாக வங்குரோத்து நிலை தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.ஆட்சிசெய்யப்படும் மக்களின் நலன்களைக் கவனிக்காமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தனிப்பட்ட பயன்களை அனுபவிக்கும் பழைய ஆட்சிமுறையே தொடருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.
ஒரு புறத்தில், அனர்த்தத்தனமான வங்குரோத்து நிலையில் இருந்தும் நினையாப்பிரகாரமான அதன் விளைவுகளில் இருந்தும் நாடு தப்புவதற்கான சாத்தியப்பாடுகள் தெரிகின்றன.அரசாங்கத்துக்கு பயனுறுதியுடைய தொழில்நுட்ப ஆலோசனை கிடைக்கப்பெறுவதை சர்வதேச நாணய நிதியமும் பாரிஸ் கழகமும் ஏனையவர்களும் உறுதிசெய்வார்கள் என்பதே அதற்கு காரணமாகும்.இந்த ஆலோசனை நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசாங்கத்தினால் கூடுதல் கடன்களைப் பெறக்கூடியதாக இருக்கும் என்கிற அதேவேளை சர்வதேச நிதிவழங்குநர்களிடம் பெற்ற கடன்களை திருப்பிச்செலுத்தவும் வாய்ப்பு கிட்டும்.ஆனால் தேசிய பொருளாதாரத்தின் உற்பத்தி ஆற்றலை அதிகரிப்பதை விடுத்து அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு அரசியல் ஆதரவை வழங்குபவர்களுக்கு அந்தரங்கமாக உதவி செய்வதில் நாட்டம் காட்டப்படுவதே பிரச்சினையாக இருக்கிறது.அதேவேளை அவசர கடன்களை திருப்பிச்சலுத்துவதற்காக மக்கள் மேலும் கஷ்டத்துக்குள்ளாக்கப்படுவார்கள்.
வேறு காரணிகள்
மக்களை தொல்லைக்குள்ளாக்குகின்ற அடிப்படையான மனிதஉரிமைகள் பிரச்சினைகளை அரசாங்கம் தொடர்ந்து அலட்சியம் செய்வது துரதிர்ஷ்டவசமானது.சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் கண்டனத்துக்கு அரசாங்கம் உள்ளாகியிருக்கிறது.ஜெனீவாவில் அடுத்தவாரம் தொடங்கவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகக்கூடிய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையை இலங்கை எதிர்நோக்குகிறது.மனித உரிமைகள் பேரவையினால் வெளிப்படுத்தப்பட்ட அக்கறைகள் தொடர்பில் இலங்கையில் பதவியில் இருந்த அரசாங்கங்கள் வேறுபட்ட நிலைப்பாடுகளை கடைப்பிடித்து வந்திருக்கின்றன.
இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவருவதா அல்லது மனித உரிமைகள் கண்காணிப்பு பொறிமுறையை உள்ளடக்கிய தற்போதைய தீர்மானத்தையே தொடருவதா என்பதை மனித உரிமைகள் பேரவை தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தற்போதைய கூட்டத்தொடர் நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை என்பது இலங்கையில் மனித உரிமைகள் பேணப்படுகின்ற நிலைவரத்திலேயே தங்கியிருக்கிறது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இம்மாதம் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்படக்கூடிய தீர்மானம் தேசிய பொருளாதாரத்துக்கு பாரிய விளைவுகளைக் கொண்டுவரக்கூடியதாக இருக்கும் எனலாம்.
மனித உரிமைகள் பிரச்சினையில் வெளித்தலையீடு கடந்த காலத்தில் நிராகரிக்கப்பட்டது.மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடரிலும் அத்தகைய நிலைப்பாடே இலங்கையினால் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும்.மனித உரிமைகள் பிரச்சினைகளை கையாளுவதற்கு கடைப்பிடிக்கப்படுகின்ற தந்திரோபாயங்கள் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை காட்டுவதற்கான உறுதியான சான்றுகளைக் கொண்டிருக்கவேண்டும்.அவ்வாறானால்தான் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விலக்கக்கூடியதாக இருக்கும்.
ஆனால் மனித உரிமைகளைப் பேணுவது தொடர்பில் இலங்கையின் கடந்தகால செயற்பாடுகள் அண்மைய எதிர்காலத்தில் அதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தக்கூடியவையாக இல்லை. மனித உரிமைகள் பேரவையும் ஐரோப்பிய ஒன்றியமும் மனித உரிமைகள் தொடர்பில் வெளிப்படுத்துகின்ற அக்கறைகளை அதுவும் குறிப்பாக பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்த அவற்றின் விசனத்தை அரசாங்கம் அலட்சியம் செய்வது புத்திசாலித்தனமானதல்ல.
நியாயப்பாடற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்களை அச்சுறுத்தி கைதுசெய்வதற்கு அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.ஆயுதமேந்திய தமிழ் தீவிரவாதிகளினால் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கிளர்ச்சியை கையாளுவதற்காக 1979 ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது.தமிழ்க் கிளர்ச்சிக்கு எதிராகவும் 1988–1989 ஜே.வி.பி.கிளர்ச்சிக்கு எதிராகவும் பரந்தளவில் பயங்கரவாதத் தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.
2019 ஏப்ரில் குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்துக்கு எதிராகவும் அந்த சட்டம் பயன்படுத்தப்பட்டது.சகல தரப்பிலும் படுமோசமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன.பெருமளவில் கண்டனத்துக்குள்ளா இந்த சட்டத்தை அமைதிவழியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட இயக்கத்தை ஒடுக்குவதற்கு பயன்படுத்துவது நியாயமற்றதாகும்.
1990 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த வந்தாறுமூலை முகாமில் இருந்து 180 க்கும் அதிகமானவர்கள் காணாமல்செய்யப்பட் சம்பவத்தின் 32 வது வருட நினைவு அடுத்தவாரம் அனுஷ்டிக்கப்படவிருக்கிறது.கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் ரி. ஜெயசிங்கமும் அந்த முகாமால்தங்கியியுந்தவர்களில் ஒருவர். அவர் முகாமின் பொறுப்பதிகாரியாகவும் அவர் செயற்பட்டார்.தனது பராமரிப்பில் இருந்தவர்களில் 180 பேர் பலவந்தமாக முகாமில் இருந்து கூட்டிச்செல்லப்பட்டதை நேரில் கண்டவர் அவர்.
அந்த மக்களுக்கு நேர்ந்த கதியை கண்டறிவதற்கு அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் எதையும் செய்யவில்லை என்பது பேராசிரியர் ஜெயசிங்கத்தின் வேதனை. அதை அவர் பல சந்தர்ப்பங்களில் எழுத்தில் வெளிக்காட்டியாருக்காறார். இந்த அரசாங்கமும் எதையும் செயயப்போவதில்லை. என்னதான் சர்வதேச நாணய நிதியம் நிதியுதவி செய்தாலும் அதை பாரிஸ் கழகம் வரவேற்றாலும், இந்த பிரச்சினைகள் கவனிக்கப்படாவிட்டால்,தீர்வு காணப்படாமல் இருக்கும் இனப்பிரச்சினையும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படாமல் சட்டத்தில் இருந்து விடுபாட்டு உரிமை பெற்றவர்கள் போன்று திரியும் போக்கும் இலங்கையை மேலும் பிளவையும் முரண்நிலையையும் நோக்கிய சரிவிலேயே கொண்டுசெல்லும்.
கலாநிதி ஜெகான் பெரேரா