புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை கோரும் மைத்திரிபால சிறிசேன

280 0

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அடுத்த வாரம் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை துரிதப்படுத்துவதே ஜனாதிபதி நோக்கம் என தெரியவருகிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை வரைய நியமிக்கப்பட்ட 6 குழுக்கள் தமது அறிக்கைகளை அரசியலமைப்புச் சட்டவாக்க சபையிடம் கையளித்துள்ளது.

இது குறித்து கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த போதிலும் அது இன்னும் தாமதமாகி வருகிறது.

இதனிடையே புதிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை இதுவரை வெளியிடவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலைமைப்புச் சட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை அறிவிக்குமாறு அரசியலமைப்புச் சட்டவாக்க நடவடிக்கை குழு சகல பிரதான கட்சிகளின் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதை விரும்பவில்லை எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.