4,000 கிலோ நெல் நாசம்: அமைச்சர் அதிரடி

131 0

பொலன்னறுவை, அரலகங்வில நெல் களஞ்சியசாலையில் 4000 கிலோகிராம் நெல் சம்பவம் தொடர்பில் அலட்சியமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அம்பாறை மற்றும் பொலன்னறுவை பிராந்திய முகாமையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பழுடைந்துள்ள நெல் கையருப்பு அம்பாறை பிராந்தியத்துக்கு சொந்தமானது என்பதால், இது தொடர்பாக, ஆறு நாட்களுக்குள் உடனடி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அம்பாறை பிராந்திய முகாமையாளருக்கு, சபையின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரிகளின் கட்டாய விடுமுறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான கிடங்குகளில் உள்ள பழைய நெல்லை கால்நடை உணவுக்காக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 2020ஆம் ஆண்டில் அனைத்து பிராந்திய முகாமையாளர்களுக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2015ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 4,000 கிலோ கிராம் அரிசி தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காமல், அரலகங்வில களஞ்சியசாலையில் சேமித்து வைத்திருந்தால் அதற்கு சம்பந்தப்பட்ட பிராந்திய முகாமையாளர்களே பொறுப்புக் கூற வேண்டும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து நெல் களஞ்சியசாலைகளையும் சோதனை செய்து, அவற்றில் பழைய நெல் கையிருப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிந்து, உடனடியாக தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு  நெல் சந்தைப்படுத்தல் சபைத் தலைவருக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.