உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதன் மூலமாகவே எங்கள் தேசத்தை மாற்றிக்கொள்ள முடியுமென வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் செ.சிறீதரன் தெரிவித்தார்.
வவுனியா விவசாய சம்மேளன அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களது நாடு மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதனை மீட்பதற்காக ஜனாதிபதியினால் ஐம்பது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு முக்கியமானதாக காணிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கல், வனவளத் திணைக்களத்தில் இருந்து காணிகளை விடுவித்தலாகும்.
“குறிப்பாக, இவ் இரண்டு விடயங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபனின் பிரசன்னத்துடன் சம்மந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
“மேலைத்தேய நாடுகளிலே பற்றைக்காடுகளை காண முடியாது. வன இலாகா பயன்படுத்துவார்கள் அல்லது விவசாயிகள் பயன்படுத்துவார்கள். ஆனால், இங்கே விவசாயம் செய்ய இடமில்லை.
“கடந்த முப்பது வருடங்களிற்கு முன் உழுந்து உற்பத்தியில் இலங்கையிலே வவுனியா மாவட்டமானது 40 சதவீதமான உற்பத்தியை மேற்கொண்ட மாவட்டமாகும். இன்று காணிகள் முழுவதும் வன இலாகாவிடம் உள்ளது. இவ்வாறு இருப்பின் எவ்வாறு உற்பத்தியை பெருக்கவோ, உற்பத்தியை செய்யவோ முடியும்.
“ஜனாதிபதியிடம் நாங்கள் கேட்பது தங்களின் 50 திட்டங்களிலே எமக்குரிய காணிகளுக்கான அனுமதிப் பத்திரத்தைத் தருவதன் மூலமாக நாங்கள் வன இலாகாவினரிடம் இருந்து தப்பிக்கொள்ள முடியும்.
“ உளுந்து உற்பத்தியாக இருந்தாலும், மரக்கறி செய்கையாக இருந்தாலும் வவுனியா மாவட்டத்தில் உற்பத்தி செய்து நாட்டுக்கே கொடுக்கக் கூடியளவு சந்தர்ப்பம் இருக்கின்றது.
“மேட்டுநிலம், வயல் மற்றும் கால்நடை மூன்றும் ஒன்றுக்கொன்று போட்டியாக செய்து கொண்டிருக்கின்றோம். வன இலாகா விட்டால் இவர்கள் நடும் மரத்துக்கு பதிலாக தென்னை மரங்களை நட்டு, வன இலாகைவை விட பெரிய வேலைகளை செய்து காட்டுவோம்” என்றார்.