31 வருடங்களுக்கு முன்னர் வெளியான பாடல் அல்பமொன்றின் அட்டையில் தனது அனுமதியின்றி தனது நிர்வாண புகைப்படம் வெளியிடப்பட்டதாகக் கூறி ஓர் இளைஞன் தாக்கல் செய்த மனுவை அமெரிக்க நீதிமன்றமொன்று நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் பிரபல இசைக்குழுக்களில் ஒன்றாக விளங்கிய, நிர்வாணா இசைக்குவினால் 1991 ஆம் ஆண்டு ‘நெவர்மைண்ட்’ எனும் இசை அல்பம் வெளியிடப்பட்டது.
இதற்கான அட்டைப்படமாக, தூண்டிலில் மாட்டப்பட்ட டொலர் நாணயத்தாள் ஒன்றை நோக்கி குழந்தையொன்று நீந்தும் படம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்பென்சர் எல்டன் எனும் இளைஞன், நிர்வாணா இசைக்குழு தொடர்பான பிரமுகர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்திருந்தார்.
தான் நிர்வாணமாக காணப்படும் புகைப்படம் தனது அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ளதாகவும், இது சிறுவர் பாலியல் படங்களுக்கு இணையானது எனவும் ஸ்பென்சர் எல்டன் கூறினார். இப்புகைப்படத்தினால் தனது வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே 3 தடவைகள் எல்டன் தாக்கல் செய்த மனுக்களை நீதின்றங்கள் நிராகரித்திருந்தன.
அதையடுத்து, லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் 4 ஆவது தடவையாக எல்டன் வழக்குத் தொடுத்தார்.
இப்படத்தை வெளியிட்டமைக்காக 150,000 டொலர் நஷ்ட ஈட்டை தான் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
மேற்படி படத்தை பிடித்த புகைப்படக் கலைஞர், கேர்க் வெட்டில், முன்னாள் நிர்வாணா இசைக்குழு அங்கத்தவர்கள் டேவ் குரோஹ்ல், கிறிஸ்ட் நோவோசெலிக், பாடகர் கர்ட் கோபைனின் விதவை மனைவியான கோர்ட்னி லவ் முதலானோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
எனினும், இவ்வழக்கை தொடுப்பதற்காக காலம் கடந்துவிட்டதாக நீதிபதி பெர்னாண்டோ ஒல்குய்ன் தெரிவித்தார்.
அத்துடன், இது தொடர்பாக எல்டன் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
கலிபோர்னியா மாநிலத்திலுள்ள நீச்சல் தடாகமொன்றில் மேற்படி புகைப்படத்தைப் பிடிப்பதற்கு, எல்டனின் பெற்றோருக்கு நிர்வாணா இசைக்குழுவினர் 200 டொலர்களை வழங்கியதாகவும், குறித்த புகைப்படக்கலைஞர், அக்குடும்பத்தினரின் நண்பர் எனவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
2003 ஆம் ஆண்டில் அப்போது 12 வயது சிறுவனாக இருந்த எல்டன், குறித்த பாடல் அல்பத்துக்கான தனது பங்களிப்புக்காக தான் ஒரு தொகை பணத்தை பெறுவதற்கு எதிர்பார்ப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
2016 ஆம் ஆண்டு, அந்த அல்பத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவையொட்டி, தனது உடலில் அல்பத்தின் பெயரை டாட்டூவாக வரைந்து கொண்டதுடன், குறித்த புகைப்படக் காட்சியை மீண்டும் படமாக்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கின் பிரதிவாதிகளின் சட்டத்தரணி வாதாடுகையில், ‘நிர்வாணா குழந்தையாக’ விளங்குவதில் எல்டன் மகிழ்ச்சிடைந்திருந்தார் எனவும், அவர் வளர்ந்தபின் அப்புகைப்படக் காட்சியை மீண்டும் உருவாக்கினார் எனவும் கூறியிருந்தார்.