இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் மேற்குக்கரை பிராந்தியத்துக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான புதிய நிபந்தனைகளை இஸ்ரேல் அமுல்படுத்தவுள்ளது.
மேற்குக் கரையிலுள்ள பலஸ்தீனியர்களை வெளிநாட்டவர்கள் காதலிக்க ஆரம்பித்தால் அது குறித்து இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் இஸ்ரேல் நிபந்தனை விதித்திருந்தது.
நேற்று திங்கட்கிழமை (05) முதல் புதிய விதிகள் அமுலுக்கு வரவிருந்தன. எனினும் இறுதி நேரத்தில் மேற்படி காதல் தொடர்பான நிபந்தனையை இஸ்ரேலிய அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.
கடந்த பெப்ரவரியில் வெளியிடப்பட்ட விதிகளின்படி, மேற்குக் கரை பிராந்தியத்துக்கு செல்லும் வெளிநாட்டவர்கள், அங்குள்ள குடியிருப்பாளர் எவருடனும் காதலில் வீழ்ந்தால், காதல் ஏற்பட்டு 30 நாட்களுக்குள் இது குறித்து இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்பதும் மேற்படி விதிகளில் ஒன்றாக இருந்தது.
பலஸ்தீனியர்களின் வெளிநாட்டுத் துணைவர்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரையான விசா வழங்கப்படும். அதன்பின் அவர்கள் புதிய விசா பெற்றுக்கொள்ளும் வரை மேற்குக் கரையிலிருந்து வெளியேறி இருக்க வேண்டும் எனவும் அவ்விதிகளில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவ்விதிகள் அமுலுக்கு வருவதற்கு ஒரு தினத்துக்கு முன்னர், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மறுசீரமைக்கப்பட்ட விதிகளை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சின் பலஸ்தீன சிவில் விவகார பிரிவு வெளியிட்டது.
இதில், பலஸ்தீனர்களுடனான காதல் குறித்து 30 நாட்களுக்குள் இஸ்ரேலிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும் என்பதும், பலஸ்தீனர்களின் துணைவர்கள் 6 மாதத்துக்குப் பின்னர் மேற்குக் கரையிலிருந்து வெளியேற வேண்டும் என்பதும் நீக்கப்பட்டிருந்தன.
திருத்தப்பட்ட விதிகள் அமுலாக்கப்படும் காலமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எனினும், இஸ்ரேலின் திட்டங்களுக்கு பலஸ்தீனர்களும் இஸ்ரேலிய அரச சார்பற்ற அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலிய அரச சார்பற்ற அமைப்பொன்றான ‘ஹமோக்ட்’ எனும் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜெசிக்கா மொன்டெல் இது தொடர்பாக கூறுகையில், ‘மூர்க்கமான சிலரை அவர்கள் அகற்றக்கூடும். ஆனால், அடிப்படை பிரச்சினை நீடிக்கிறது. தம்பதியினரில் ஒருவர் வெளிநாட்டவராக இருந்தால் அல்லது அரசியல் காரணங்களுக்காக, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் ஒன்றாக வசிப்பதை இஸ்ரேல் தடுத்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட அறிவிப்பில், மாணவர்கள், கல்வியியலாளர்கள் தொடர்பிலும் இஸ்ரேல் நிபந்தனை விதித்திருந்தது, பலஸ்தீன பல்கலைக்கழகங்களில் வருடாந்தம் 100 வெளிநாட்டு விரிவுரையாளர்களும் 150 வெளிநாட்டு மாணவர்களும் மேற்குக் கரையில் வசிக்க அனுமதிக்கப்படுவர் என இஸ்ரேல் வரையறை விதித்திருந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டப்பட்ட அறிவிப்பில் இவ்விதியும் நீக்கப்பட்டிருந்தது.
திருத்தப்பட்ட விதிகள் எதிர்வரும் ஒக்டோபர் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளன. 2 வருட காலத்துக்கு பரீட்சார்த்தமாக இவ்விதிகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலின் புதிய விதிகளினால் தமக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என வர்த்தகர்கள், தொண்டர் அமைப்புகளும் தெரிவித்துள்ளன.
மேற்குக் கரையில் சில மாதங்களுக்கு மேல், வேலை செய்வது அல்லது தொண்டராக பணியாற்றுவதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமை பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.